திமுக.,வில் மு.கருணாநிதியின் மூத்த வாரிசாக வலம் வந்தவர். மத்திய அமைச்சராகப் பணி ஆற்றியவர். மதுரைக்கு தென் பகுதியில் திமுக.வின் செல்வாக்கு இவரை வைத்துதான்! திருமங்கலம் ஃபார்முலா என்று புதிதாய் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்.
எல்லாம் இருந்தாலும், கருணாநிதி எம்ஜிஆரைப் பார்த்து எப்படி கணக்கு கேட்கிறார் என்று கவிழ்த்து விட்டாரோ, வை.கோபால்சாமியைப் பார்த்து என் மகனைக் கொல்லப் பார்க்கிறார் என்று விரட்டி விட்டாரோ, அப்படி… தன்னையே கொல்லப் பார்க்கிறான் என் மகன் என்று நீலிக் கண்ணீர் வடித்து தன் அடுத்த மகன் ஸ்டாலினுக்காக கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைத்தார் மு.க.அழகிரியை!
அதன் பிறகு அமைதியாக தன் வேலையை மதுரையில் மட்டிலும் செய்து வந்த அழகிரி, இப்போது தமிழக அரசியல் களத்துக்குள் காலடி வைக்கக் காலம் பார்த்து வருகிறார். களம் அமைத்து வருகிறார். அதனால் தான் செயற்குழு குறித்து கருத்து தெரிவித்தார். உண்மையான கருணாநிதி விசுவாசிகள் தன் பக்கம் என்றார்.
இந்நிலையில், அழகிரியின் திடீர் பேச்சு குறித்தும்,கருணாநிதியின் சமாதியில் அவரது திடீர் வணக்கம் குறித்தும் திராவிடர் கழக தலைவர் வீரமணியிடம் கேட்கப்பட்டது. இது குறித்து வீரமணி குறிப்பிட்ட போது, அழகிரியை விருந்தாளி என்று வர்ணித்தார்.
கேள்வி: அழகிரியை மத்திய அரசு தூண்டிவிடுகிறதா?
கி.வீரமணி: வீட்டில் இருப்பவர்களை கேளுங்கள், விருந்து சாப்பிட வந்தவர்களை பற்றி கேட்கவேண்டாம்.
– அழகிரியை ஒரு விருந்தாளி என்று வீரமணி குறிப்பிட்டது இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையில் அழகிரிக்காக எப்போதும் போஸ்டர் அடித்து ஆதரவு காட்டும் அழகிரி விசுவாசிகள் இப்போது வீரமணிக்காகவும் போஸ்டரை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்!




