ஆந்திராவில் 20 பேர் சுட்டுக்கொலை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு

சென்னை: திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் பகுதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆந்திர தொழிலதிபர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்களை செம்மரக்கடத்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். இன்றைய சம்பவத்துக்குப் பின்னர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர். இந்த 5 மாவட்டங்களில் இருந்து ஆந்திர வனப் பகுதிக்குள் செல்லும் தமிழக தொழிலாளர்கள் யார்? அவர்கள் எதற்காக காட்டுக்கு செல்கிறார்கள் என்பது பற்றிய தகவலை வனத்துறையிடம் போலீசார் சேகரிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் 5 மாவட்ட போலீசாரும் தங்கள் எல்லையோரங்களில் குறிப்பாக வனப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.