இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
முதல் 2 டெஸ்டில் மோசமாக இருந்த நமது வீரர்களின் பேட்டிங் கடந்த டெஸ்டில் மிகவும் சிறப்பாக இருந்தது. இதே பேட்டிங் திறமையை 4-வது டெஸ்டிலும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். முடியாத பட்சத்தில் ‘டிரா’ செய்ய முயற்சிக்கும்.
இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக கேப்டன் கோலி அணியில் மாற்றம் செய்யமாட்டார் என்று கருதப்படுகிறது. பயிற்சியின்போது அஸ்வினுக்கு ஏற்பட்ட காயத்தை பொறுத்து இருக்கிறது.
இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. வெற்றி பெற முடியாவிட்டால் அந்த அணி ‘டிரா’ செய்தால் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் இந்த அணி வெற்றி அல்லது டிரா என்ற நோக்கத்தில் களம் இறங்கும்.




