பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தீக்குளிக்க முயன்ற 3 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்!
பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்ப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி லெட்சுமி, இவரது சகோதரி செல்வி (வயது 37), மற்றும் அண்ணி வசந்தா (வயது 40 ) ஆகிய மூவரூம் இன்று காலை பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்தனர்.
அவர்கள் தாங்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காத பெரம்பலூர் போலீசாரைக் கண்டித்து தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த பெண் போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
மேலும், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செங்குணத்தில் உள்ள அவரது நிலத்தின் பேரில், அவரது உறவினரான செங்குணத்தை சேர்ந்த தனபால் மகன் தமிழ்ச்செல்வன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றாதாவும், பின்னர், வட்டி அசலுடன் திருப்பி செலுத்திய பின்னரும், பத்திரங்கள் வழங்காமல் இருப்பதாகவும், நிலத்திற்குள் அத்து மீறி நுழைந்து பயிர்களை சேதப் படுத்துவதாகவும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர்.
அங்கிருந்த அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும், போலீசார் அவர்களை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




