அகில இந்திய 92வது எம்சிசி முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டி சென்னையில் இன்று தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறுகிறது. முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டி தொடர் கடந்த 91 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சென்னையை சேர்ந்த முருகப்பா தொழில் குழுமம் சர்பில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த தொடரில் ஓஎன்ஜிசி அணி சாம்பியன் பட்டம் வென்றது. அவர்களுக்கு தங்கக் கோப்பையுடன், ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான தொடர் சென்னையில் இன்று தொடங்க உள்ளது. மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் போட்டிகள் எழும்பூர், ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெறும். நடப்பு சாம்பியன் ஓஎன்ஜிசி உட்பட மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 15ம் தேதி அரை இறுதி ஆட்டங்களும், 16ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சம், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும்.
ஏ பிரிவு: ஓஎன்ஜிசி, இந்தியன் ரயில்வே, ஆர்மி லெவன், மத்திய செயலக அணி, மும்பை ஹாக்கி சங்கம்.
பி பிரிவு: பெங்களூரு ஹாக்கி சங்கம், ஐஓசி, பஞ்சாப் சிந்து வங்கி, இந்திய கடற்படை, சென்னை ஹாக்கி சங்கம்.




