பரமக்குடி: பரமக்குடியில் காக்காத் தோப்பு பகுதியில் குப்பைகளுக்கு இடையே மிகவும் பழமையான, பழ்ங்கால சுவாமி சிலைகள் எட்டு கண்டெடுக்கப் பட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டன.
பரமக்குடி நகரின் கிழக்குப் பகுதியான காக்காத் தோப்பு பகுதியில், குப்பைகளுக்கு இடையே சுவாமி சிலைகள் கிடப்பதை அப்பகுதியில் சென்ற மக்கள் கண்டு அதிர்ந்தனர். உடனே அவர்கள் இது குறித்து வருவாய்த் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பரமக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், துணை தாசில்தார் வரதன், வேந்தோணி குரூப் கிராம நிர்வாக அலுவலர்கள் ரெத்தினேஸ்வரர், ஈசுவரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளை கைப்பற்றினர்.
அங்கு பழங்கால பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார், விஷ்ணு துர்கை, சரஸ்வதி, பிரம்மன், இரண்டு அம்மன் சிலைகள் ஆகியவை 2 அடி முதல் 4 அடி வரையிலான உயரத்தில் அமைந்த கல் சிலைகள்.
இச் சிலைகள் எங்கு இருந்தவை?, எதற்காக குப்பைகளுக்கு இடையே போடப் பட்டுள்ளன என்பது குறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பரமக்குடியில் கல்லால் ஆன சுவாமி சிலைகள் கண்டெடுக்கப் பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைக் காண கூட்டம்கூட்டமாக மக்கள் காக்காத் தோப்பு பகுதிக்கு வந்தனர். அங்கே கண்டெடுக்கப் பட்ட சுவாமி சிலைகளை வணங்கிச் சென்றனர்!




