மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

 

தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது .

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்தல் திருச்சியில் நடைபெற்றது.

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மாநில தலைவராக மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளராகவும், எம்.அப்துல் ரஹ்மான் முதன்மை துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் 7 துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், துணை செயலாளர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்..
புதிய நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 510 பேர் பங்கேற்றனர்.

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது :–

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆண்டுதோறும் நடத்தி வரும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டை இந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10 அன்று விழுப்புரத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு 169 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய – மாநில அரசுகள் நிவாரண பணியை போர்க்கால அடிப்படையில் விரைவுப்படுத்த வேண்டும்.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பணியாற்றும். இத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தி.மு.க. தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

மாநாட்டின் நிறைவின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் அஹமது சாகிப் எம்.பி., கேரள மாநில தலைவர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், தோழமை கட்சிகளின் தலைவர்களை உரையாற்ற அழைப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள து