தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்றும் தொழில் துறையில் பிற மாவட்டங்களைப் போன்று இதுகாறும் முன்னேறவில்லை.
வெளிநாட்டு முதலீடுகளும் இம்மாவட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர் வசதியாக வந்து போவதற்கு பன்னாட்டு விமானதளம் அங்கே இல்லாததேயாகும்.
சென்னையை எடுத்துக்கொண்டால் பன்னாட்டு விமானதளம் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாரளர்கள் புதிய புதிய தொழில்கள் தொடங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வருகின்றனர். அதனால் பல்வேறு ரக பன்னாட்டு தொழில்கள் அங்கு தொடங்கப்பட்டு அனேகர் பயன்பெறுகின்றனர். சென்னை பெருந்தொழில் நகரமாக உருவாகுவதற்கு முக்கிய காரணியாக இந்த பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருப்பதேயாகும்.
ஆனால் தென் மாவட்டங்களில் இத்துறையில் எவ்வித வளர்ச்சியும் காணப்படவில்லை. இருப்பினும் தொழில் நுட்பக் கல்வி நிலையங்கள் இங்கேதான் அதிகமாக உள்ளது. தொழில் நுட்ப வல்லுனர்களும் அதிக அளவில் இங்கே உருவாகி வந்தாலும் இவர்கள் அனைவரும் வேலைக்காக சென்னைக்குதான் படை எடுக்கின்றனர்.
பன்னாட்டு விமானதளம் இல்லாதகுறையால் மட்டுமே பல்லாண்டுகளாக பேசப்பட்டு வருகின்ற “நாங்குநேரி தொழில்பூங்கா” மற்றும் “நாகர்கோவில் ரப்பர் பூங்காக்கள்” பூக்காமலும் காய்க்காமலும் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.
ஆகையால் தென்மாவட்டங்களின் தொழில் மற்றும் வியாபார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இம்மூன்று மாவட்டங்களின் நடு நாயகமாக விளங்குகின்ற வள்ளியூரில் ஒரு பன்னாட்டு ஜம்போ விமானதளம் அமைக்க வேண்டும்.
பன்னாட்டு ஜம்போ விமான தளத்தக்கு நீளமான ஓடுதளம் தேவை என்பதால் இதை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் சிறிதளவு கூட இல்லை. வள்ளியூர்ப் பகுதியில் சமநிரப்பான தாரிசு நிலங்கள் எவ்வளவு தொலைவுக்கு வேண்டுமானாலும் கிடைக்கின்றன.
ஆகையால் இந்த பிரதேசம் பன்னாட்டு ஜம்போ விமானநிலையத்திற்கு மிகவும் பொருத்தமான இடமாகும். நீள ஓடுதளங்களை அமைப்பதற்கு இயற்க்கையாக சமநிரப்பு நிலம் இங்கே அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
ஏனவே இதுகுறித்து நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்களும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து மத்திய அரசை அணுகி இங்கே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்தல் வேண்டும்.




