ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
துபையில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் லிதன்தாஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 121 ரன்களுக்கு லிதன் தாஸ் ஆட்டமிழந்ததை அடுத்து, மெஹிதி ஹசன் 32 ரன், சவும்யா சர்க்கார் 33 ரன் சேர்த்தனர். வங்கதேச அணி 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
223 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 48 ரன், ஷிகர் தவான் 15 ரன் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் 37 ரன், தோனி 36 ரன் எடுத்தனர். தொடர்ந்து புவனேஸ்குமார், ஜடேஜா இருவரும் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்து நிதானமாக ஆடினர். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 ரன் எடுக்க வேண்டிய நிலையில் பரபரப்பு அதிகமானது. அப்போது 23 ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ் நிதானமாக விளையாடி கடைசி பந்தில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
தொடர்ந்து இந்திய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியை தில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.





