தமிழகத்திற்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1000 கோடி : பிரதமர் மோடி உத்தரவு

 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ஏற்கனவே ரூ. 940 கோடி நிவாரண நிதிவழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். தற்போது கூடுதலாக ரூ.1000 கோடி உடனடியாக நிதிவழங்க உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் முப்படையும், தமிழக காவல்படை மற்றும் தீயணைப்பு படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் வெள்ளச்சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் புதுடெல்லியில் இருந்து அரக்கோணம் வந்தார்.

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு ராணுவ ஹெலிகாப்டரில்வந்த பிரதமர் மோடி அடையாறில் உள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்திற்கு சென்றார். கடற்படை அலுவலகத்தில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக ஆளுநர் ரோசயாவுடன் வெள்ளத்தினால் ஏற்பட்டுஉள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார். வெள்ளச் சேதத்தை ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது :- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ. 1000 கோடி உடனடியாக நிதிவழங்க உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இந்திய அரசு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் பார்வையிட்ட மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், பாதிப்பு குறித்து, பிரதமர் மோடியிடம் விளக்கி கூறினார் . மிகவும் கடுமையாக பெய்த கனமழையினால் ஏற்பட்டுஉள்ள சேதம் மற்றும் துயரத்தை நானே நேரில் பார்த்தேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு கூறியுள்ளார்.