இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பும் சென்னை

 
சென்னை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சென்னை நகரே வெள்ளத்தில் மூழ்கியது. 36 மணி நேரத்துக்கு பெய்த தொடர மழையால் சென்னை நகரை சுற்றி உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் திறந்து விடபட்டது.
 
இதனால் சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள குன்றத்தூர், மாங்காடு, பம்மல், அனகாபுத்தூர், மணப்பாக்கம், விமான நிலையம், சைதாப்பேட்டை, கிண்டி, கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர், உள்பட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
 
மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால் பல பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் கடந்த 3 நாட்களாக இயக்கப்படமல் இருந்தது.தற்போது ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு குறைக்கபட்டுள்ளது. மேலும் மழை குறைந்து உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படிப்படியாக தண்ணீர் வடிய ஆரம்பித்தது. இன்று முதல் மாநகர பஸ்கள் அதிகளவு ஓடத் தொடங்கின. 3 நாட்களாக ஓடாமல் இருந்த பல பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
 
கடந்த 2 தினங்களாக மழை விட்டுள்ளதால் சென்னையில் தேங்கிய வெள்ளம் வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் உட்பகுதி சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்து விட்டது.கூவம் கரையோரம் மற்றும் அடையார், பகுதிகளில் வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்த வெள்ளம் வடிந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அந்த பகுதியில் வெள்ளம் வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் இன்று பல பகுதிகளுக்கு வழக்கமான மாநகர பேருந்து சேவை இயக்கப்பட்டது.
 
அடையாறு ஆற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளம் ஓரளவு குறைந்தது. இதனால் சைதாப்பேட்டை பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் குறைந்து பாலத்துக்கு கீழே தான் தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக அந்த பாலத்தில் மீண்டும் போக்கு வரத்து தொடங்கி உள்ளது. இது மக்களை நிம்மதி ஏற்பட செய்துள்ளது. சென்னை மாநகரில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்புகிறது.