தமிழக மக்கள் தவிப்பால் வேதனை என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு வாட்டுகிறது : கருணாநிதி

 
 
தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து,பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பை பார்க்கும் போது என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு என்னை வேதனை வாட்டுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பை பார்க்கும் போது என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு வேதனை என்னை வாட்டுகிறது.
 
இந்தநிலையில், பிரதமர் மோடி சென்னைக்கு வந்து வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை நேரடியாக கண்டதோடு, ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிவாரண உதவி தொகை ரூ.940 கோடியுடன் மேலும் ரூ.1,000 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், மழை, வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கக்கூடிய அளவுக்கு பாதிப்புகளை ஆய்வு செய்து மேலும் தேவையான நிதியை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 
நான் ஏற்கனவே தெரிவித்திருந்தவாறு அனைத்துக்கட்சி குழு ஒன்றை அமைத்து கண்காணித்தால் தான் மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதி முழுமையும் முறையாக பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாகியுள்ள மக்களுக்குச் சேர்வதை உறுதி செய்ய முடியும். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக அனைத்துக்கட்சி குழுவை அமைத்து நிவாரண உதவிகளை கண்காணிக்க வேண்டும் என்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .