அரசு வேண்டுகோள் விடுக்கவில்லை : அமெரிக்கா தமிழக வெள்ள சேத பணிகளுக்கு உதவ தயார்

 
 
தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்கா தமிழக வெள்ள சேத பணிகளுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளது. 
 
இதுகுறித்து வாஷிங்டன் நகரில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:-
 
பல ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை தமிழ்நாட்டில் பெய்து உள்ளது. இதன்காரணமாக மிக மோசமாக சென்னை நகரை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.இந்த வெள்ளத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். எங்களுடைய சிந்தனையெல்லாம், இன்னும் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களைப் பற்றியே உள்ளது.
 
எனவே வெள்ளசேத பணிகளுக்கு தமிழக மக்களுக்கு உதவிசெய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் உதவிட இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு வெள்ள நிலைமை குறித்து அமெரிக்கா விவாதித்தது.எனினும், இதுவரை இந்திய அரசிடம் இருந்து எங்களிடம் உதவிகோரி எந்த வேண்டுகோளும் வரவில்லை. நிச்சயமாக, தனது உள்நாட்டு தேவைகளையும் அல்லது அவசர உதவிகளையும் தன்னால் சுயமாக நிவர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு இந்திய அரசாங்கம் வளர்ச்சி கொண்டதாக உள்ளதையும் குறிப்பிடவேண்டும்.
 
பொதுவாக இதுபோன்ற இயற்கை பேரழிவுகளின்போது, இந்தியா போன்ற கூட்டாளி நாடுகளுக்கு எங்களால் எந்த விதத்தில் உதவி அளிக்க முடியுமோ அதை நாங்கள் செய்வது வழக்கம்.சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், கடந்த 3-ந்தேதி எங்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியது. அதன்படி தமிழ்நாட்டில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என மார்க் டோனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்