சென்னை: இந்து ஆலயங்களை சாத்தான்களின் வசிப்பிடம் என்றும், இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்றும் கூறிய கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது நேற்று ஒரே நாளில் 11 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இந்நிலையில், தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார் மோகன் சி லாசரஸ்.
அதில், “என்னைப்பற்றி ஒரு குறிப்பிட்ட ‘சங்கத்தை’ சார்ந்தவர்கள் தீவிரமாக அவதூறு பரப்பி வருகிறார்கள். தவறான செய்தியை பரப்பினவர்களையும், என்னை குற்றம் சொல்லி பேசியவர்களையும், ஆண்டவர் யேசு ஆசிர்வதிப்பாராக” என்று கூறியுள்ளார்.
அந்த வீடியோ லிங்க் https://www.facebook.com/465189897013586/posts/891462501052988/ .
ஹிந்து மதத்தை ஹிந்து தெய்வத்தை நான் இழிவுபடுத்தி பேசியதாக செய்தி வெளியிடப்படுகிறது. அந்த வீடியோவில் நன்றாக கவனித்து பாருங்கள், நான் ஹிந்து மதத்தையோ, ஹிந்து தெய்வத்தையோ நான் உச்சரிக்கவே இல்லை.
இது எந்த தேதியில், எந்த இடத்தில் யாருக்காக சொல்லப்பட்டது என்பதை இதை வெளியிட்ட தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் சொல்லவேயில்லை. இது பொது இடத்தில் பேசப்படவில்லை. இது பொது மக்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தையும் அல்ல. இது நடந்தது சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன் – கிறிஸ்தவ ஊழியர்கள் முன் நான் பேசியது. கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இந்தியாவில் பரவியிருக்கும் மதம் பற்றி அவர்கள் கேள்விகளுக்கு விளக்கம் சொன்ன போது சொன்னது. நாங்கள் வேதத்தை விசுவாசிக்கிறோம். வேதத்தில் (பைபிளில்) சொல்லப்பட்டிருப்பதை தேவனின் வார்த்தையாக அப்படியே விசுவாசிக்கிறவர்கள். ஆகவே, வேத புத்தகத்திலே சொன்னதற்கும் இந்திய மக்களுடைய மதத்திற்கும் உள்ள காரியத்தை கிறிஸ்தவ ஊழியர்களுக்கு விளக்கி சொன்ன சம்பவம் அது. அது வெளியில் மற்றவர்களுக்காக சொல்லப்பட்ட காரியமே அல்ல.
நான் யாரையும் மதம் மாற்ற முயற்சிப்பதில்லை. என்னுடைய சொந்த சகோதரர்கள் இருவர் இன்னும் ஹிந்துக்களாகத் தான் இருக்கிறார்கள்.
என்னைப்பற்றி ஒரு குறிப்பிட்ட ‘சங்கத்தை’ சார்ந்தவர்கள் தீவிரமாக அவதூறு பரப்பி வருகிறார்கள். அந்த சங்கத்தை சாராத மற்ற பொது மக்கள், ஹிந்து சகோதர சகோதரிகள் இருந்தால், ஒரு வேளை நான் பேசியதை கேட்டு வருத்தமடைந்திருந்தால், அதற்காக நான் வருத்தப் படுகிறேன். உங்களை வேதனை படுத்துவதோ, உங்கள் நம்பிக்கையை குறை சொல்லி இழிவு படுத்துவதோ என்னுடைய நோக்கமும் இல்லை. அதை நான் செய்வதும் இல்லை.
ஆகவே இதை தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள். இதை நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்ட, வேதத்திற்கு விளக்கம் கொடுத்த காரியம் – அவ்வளவுதான்.
இந்த தவறான செய்தியை பரப்பினவர்களையும், என்னை குற்றம் சொல்லி பேசியவர்களையும், ஆண்டவர் யேசு ஆசிர்வதிப்பாராக…. என்று அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார் மோகன் சி லாசரஸ்.




