நிவாரண நிதி வழங்குவோருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் : கி.வீரமணி

 
தமிழக வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வருபவர்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு பெற்றுத்தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரகணி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் கி.வீரகணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: –
 
கர்நாடக அரசு முதலமைச்சர் தமிழ்நாடு துயர் துடைப்பு நிவாரண நிதிக்காக 5 கோடி ரூபாய் அளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அண்டை மாநிலத்தின் நல்லுறவுக்கு ஒரு அடையாள அறிகுறி. காவிரி நதி நீர் பிரச்சினை வேறு, இந்த மனிதநேயம் வேறு.
 
பணம் அனுப்புவதற்காக கர்நாடக அரசு அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றுள்ள நிலையில் தமிழக அரசின் தரப்பிலிருந்து சரியான விடை கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளன. இதுபோலவே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளதும் வரவேற்கத்தக்கதே.
 
ஏற்கனவே முதன் முதலில் தி.மு.க. சார்பில் அதன் தலைவர் கருணாநிதி அறிவித்து, அதைப்பெறுவதற்கு முதலமைச்சரோ, நிதி அமைச்சரோ, தலைமைச்செயலாளரோ கிடைக்காத நிலையின் காரணமாக 2 நாள் முயற்சிக்குப்பின் நிதித்துறை செயலாளரிடம் தி.மு.க. பொருளாளரும், திமு.க. சட்டமன்றத் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொண்டு போய் கொடுத்துள்ளார்.
 
எனவே தனியே வெள்ள நிவாரண துறை ஒன்றை அதிகாரிகள் பொறுப்புக்குரியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பேரிடரைச் சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் நன்கொடை வழங்கிட முன் வருவோருக்கு 100 சதவீத நன்கொடை வரி விலக்கினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற்று, உடனடியாக அறிவித்தால் மேலும் மேலும் நிதி தமிழக அரசுக்குக்குவியும் என்பது உறுதி. எனவே உதவும் கரங்களை மட்டும் பாருங்கள், அது யாருடைய கரங்கள் என்று நிமிர்ந்து கூட பார்க்க வேண்டாம் என கி.வீரகணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.