சென்னை: நக்கீரன் கோபாலை விடுதலை செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ கைது செய்யப் பட்டார். இந்த விவகாரம் ஆளுநர் மாளிகை அரை அரக்க பரக்க விவாதிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை பார்க்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாம் வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை பார்க்க முற்பட்டதாகவும், தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி, அதனைக் கண்டித்து சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தின் முன்பு வைகோ தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரை வழக்கறிஞர் சந்திக்க அனுமதி மறுக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்று என்பதை வைகோ கூற, அதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே போலீசார் மதிக்கவில்லை என்றும், இதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம் என்றும் வைகோ விவாதித்தார். தொடர்ந்து வைகோ அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அதேநேரம், பத்திரிக்கையாளர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நக்கீரன் கோபால் கைதை கண்டித்து முழக்கங்களும் எழுப்பினர். வைகோவை போலீசார் சமாதானப்படுத்த முயன்றபோதும், நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததால், போலீசார் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.இதனால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அருகே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளுனரின் பணியில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு குறுக்கிட முடியும்? நக்கீரன் கோபால் எவ்வாறு குறுக்கிட்டார் என்பது தெரியவில்லை. அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறித்து நக்கீரன் இதழ்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது தான் கைதுக்கு காரணம் என்று ஊடகத்துறையினர் கூறுகின்றனர்.
இது உண்மை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது இதைவிட மோசமான தாக்குதலையும், அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்து விட முடியாது. ஒருவேளை ஆளுனர் குறித்து எழுதப் பட்ட தகவல்கள் தவறானதாக இருக்குமானால் அதற்காக அவதூறு வழக்கு தொடரலாம். அதற்கு மாறாக ஊடக ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யக்கூடிய, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கக்கூடிய செயலாகவே அமையும். இதை அனுமதிக்க முடியாது.
எனவே, நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும்… என்று வேண்டுகோள் விடுத்தார்.
பாமக., நிறுவனர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், திமுக., அதிமுக., காங்கிரஸ் என அனைத்து அரசியல்வாதிகளுமே அவரவர் அரசியல் பிரசாரத்துக்காகவும், அடுத்தவர் மீது அவதூறு பரப்பவும், அரசியல் காழ்ப்பு உணர்வை மக்களிடையே விதைக்கவுமே ஊடகங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது!




