மும்பை அருகே ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து குழந்தை பலி

தானே:

மும்பை அருகே ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை ஒன்று பலியானது. இருவர் காயம் அடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள பிவாண்டி நகரில் வசித்து வரும் தம்பதிக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மேல் மருத்துவ வசதி தேவைப்பட்டதால், தானேயில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் மும்பையில் உள்ள நவீன மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், ஆம்புலன்சில் குழந்தையுடன் சென்றனர். உடன் ஒரு டாக்டரும், நர்சும் அதில் பயணித்தனர்.

அப்போது ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து தீப்பொறி கிளம்பியதை டாக்டரும் நர்சும் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் குழந்தையை விட்டு விட்டு கீழே குதித்தனர். அதற்குள் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீப்பிடித்தது. இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்தத் தீ அருகில் நின்றிருந்த மற்றொரு ஆம்புலன்சிலும் பரவியது.

தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது எனினும் ஆம்புலன்சில் இருந்த குழந்தை உடல் கருகி பலியானது. குழந்தையின் பெற்றோர் வெளியில் நின்றிருந்ததால் அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லை.