அடடே… தனியார் டிவி திருவிளையாடலால் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கம் ரத்து

 

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜ் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக நேற்று அறிவித்துள்ளார். ஆனால், இது தவறான தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தெரியவந்ததால், அவரது நீக்கத்தை இன்று ரத்து செய்தார்.

சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடராஜ் அளித்த பேட்டியின்போது, வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதன் எதிரொலியாகவே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயலலிதா அதிமுகவில் இருந்து தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜை அதிரடியாக நீக்க முக்கிய காரணம் தனியார் தொலைக்காட்சியே என்று அந்த தொலைக்காட்சியின் பெயருடன் சமூக ஊடகங்களில் வைரலாக தகவல் பரவியது.

டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் தமிழக அரசை விமர்சித்து பேசியது மூத்த பத்திரிகையாளர் ’இந்து’ ஆர்.நடராஜன். தவறுதலாக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நட்ராஜ் புகைப்படத்தை காட்டிவிட்டனர் என்று பரவிய தகவல், அதிமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவி உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர் ஆ.நடராஜ்.நேர்மையான அதிகாரி என்று பொதுவாக கூறப்பட்டாலும் கூட அதிமுக அனுதாபி என்று அனைவராலும் பேசப்பட்டவர். கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இவர் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் நடராஜ். இணைந்து கொண்டார்,

இந்நிலையில், நடராஜை அதிமுகவில் இருந்துஅதிரடியாக ஜெயலலிதா நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். அதில்…

கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆர்.நடராஜ் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அ வருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மேற்கண்ட நடவடிக்கை தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில், இன்று அவர் இன்னொரு அறிக்கை விடுத்தார். அதில், கடந்த 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்தும், ஆர்.நட்ராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் தொடர்கிறார் என்றும் கூறியுள்ளார்.