வெடிகுண்டு மிரட்டலால் விடுமுறை: மதுரையில் 20 பள்ளிகளில் சோதனை

மதுரை:

மதுரையில் வெடிகுண்டு மிரட்டலால் 20 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை மாநகர் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள் நேற்று காலை தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், அண்ணாநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும், அது எந்தப் பள்ளி என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள் என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

உடனே இதுகுறித்து காவல் துறை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், அண்ணாநகர் போலீஸார் உடனடியாக வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் தடுப்புப்பிரிவு போலீஸாரை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். அண்ணாநகர் மற்றும் வண்டியூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் சொக்கிக்குளம் பகுதியில் உள்ள பள்ளியிலும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சென்று சோதனை நடத்தியும், பள்ளிகளில் எந்த வெடிபொருள்களும் கண்டறியப்படவில்லை.

வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த வதந்தியால் 20க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளி வாகனங்களில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மற்ற மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.