மூன்று தென் மாவட்ட மதிமுக., செயலர்கள் கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் ஐக்கியம்

சென்னை:

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்கள் மதிமுக.,வில் இருந்து விலகி கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் ஆகியோர் மதிமுக.,வில் இருந்து விலகி திமுக.,வில் இணைந்தனர். நேற்று மாலை 6.45க்கு திமுக., தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தார். தொடர்ந்து மதிமுக., மாவட்ட செயலாளர்கள் 4 பேரையும் மு.க.ஸ்டாலின் கருணாநிதி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் கருணாநிதிக்கு மாலை அணிவித்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் ஜோயல், சரவணன், பெருமாள், தில்லை செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசியபோது, மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கட்சி தொண்டர்களின் கருத்தை ஒரு போதும் கேட்பதில்லை. அவர் எண்ணியதைத்தான் கட்சிக்குள் திணிக்க முயல்வார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலை மதிமுக., புறக்கணித்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் களத்தில் மதிமுக., தொண்டர்கள் பம்பரமாய் சுற்றி களப் பணியாற்றினர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இம்முறை திமுக.,வுடன் கூட்டணி சேருவோம் என்று கூறி வந்தார். திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி மக்கள் நல கூட்டு இயக்கம் கூட்டணியாக மாறும் என்றார். அ.திமுக.,வை வீழ்த்துவோம் என்று சொல்லி வந்தவர் மறைமுகமாக அ.திமுக.,விற்கு உதவும் வகையில் செயல்பட தொடங்கினார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாங்கள் இன்று தாய்க் கழகத்தில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஒரு மாற்று அணியாக மக்கள் நல கூட்டு இயக்கத்தை மக்கள் நல கூட்டணியாக மாற்ற வைகோ முடிவு எடுத்தபோது, அக்கட்சியில் இருந்து முன்னணித் தலைவர்கள் விலகினர். அக்கட்சியின் மாநில பொருளாளர் மாசிலாமணி, காஞ்சீபுரம் மாவட்ட செயலாளரும், வைகோவின் தீவிர விசுவாசியுமான பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன், மதிமுக., மாநில மகளிர் அணி செயலாளர் விஜயகுமாரி உள்பட பலர் மதிமுக.,வில் இருந்து விலகி கட்சி தலைமைக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினர். திமுக.,வில் இணைந்த அவர்களுக்கு திமுக., தலைமை பதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் தென்மாவட்ட செயலாளர்கள் 4 பேர் தங்கள் ஆதரவாளர்களுடன் திமுக.,வில் ஐக்கியமாகியுள்ளனர்.