அசாமில் கோயிலுக்குள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்தனர்: ராகுல்

புது தில்லி:

தனது அசாம் சுற்றுப் பயணத்தின் போது, தன்னை கோவிலுக்குள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்ததாக ராகுல் காந்தி நேற்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டார். அப்போது பர்பட்டா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் அவரை நுழைய விடாமல், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்ததாக முதல்வர் தருண் கோகோய் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகக் கூறி, தில்லியில் பாராளுமன்றத்துக்கு வெளியே காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, நான் அசாம் சென்றிருந்த போது, பர்பட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல முயன்றேன். ஆனால் என்னை கோவிலுக்குள் செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்து விட்டனர். எனக்கு முன்னால் பெண்களை நிறுத்திய அவர்கள், என்னிடம், ‘நீங்கள் கோவிலுக்குள் செல்ல முடியாது’ என்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறியபின், மாலையில்தான் அந்த கோவிலுக்கு நான் சென்றேன். பா.ஜ.க.வின் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஒரு கோவிலுக்குள் என்னை நுழைய விடாமல் தடுக்க அவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார் ராகுல்.