விசா கட்டண இரட்டிப்பு முடிவு: ஒபாமாவிடம் பிரதமர் மோடி கவலை

புது தில்லி:

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி எச்-1பி மற்றும் எல்-1 விசாவுக்கான கட்டணத்தை இரட்டிப்பாக்க அமெரிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மோடி தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை, 1.1 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான செலவு மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் வழங்கியது. மேலும், எச்-1பி விசாவுக்கான சிறப்பு கட்டணத்தை 4 ஆயிரம் டாலராகவும் எல்-1 விசாவுக்கான சிறப்புக் கட்டணத்தை 4,500 டாலராகவும் உயர்த்தவும் செனட் சபை முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு, இப்போதுள்ள கட்டணத்தைப்போல 2 மடங்கு ஆகும். இந்தச் செலவு மசோதா மீது நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தக் கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு 100 கோடி டாலர் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி, 2001-ம் ஆண்டு உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலில் (9/11) பாதிக்கப்பட்டவர்களின் சிகிச் சைக்காக பயன்படுத்தப்படும். அமெரிக்காவின் இந்த முடிவால் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில், பாரீஸ் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டதற்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடியை ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமெரிக்கா விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துவது குறித்து எடுத்துள்ள முடிவு கவலை அளிப்பதாக ஒபாமாவிடம் மோடி தெரிவித்தார்.