அதிமுக., தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது. புதிய சிலை நிறுவப் படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிதாக நிறுவப்பட உள்ள சிலைகளின் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் 7 அடி உயர எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, ஜெயலலிதாவின் 7 அடி உயர சிலை நிறுவப்பட்டது. ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகின.
இதனால், பழைய சிலை அகற்றப்பட்டு புதிய சிலை அங்கே நிறுவப் படும் என மூத்த அமைச்சர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரது சிலைகளையும் மாற்ற முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலைதா இருவரது சிலைகளும் 8 அடி உயரத்தில் இருக்கும் வகையில், ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் சிலை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆந்திராவுக்குச் சென்ற அமைச்சர்கள் தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிலைகளைப் பார்வையிட்டனர். தற்போது, சிலைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக அலுவலகத்தில் அந்தப் புதிய சிலைகள் நிறுவப்படவுள்ளன.




