ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி

 
 
பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 10-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் பணியாற்றிய டி எஸ் பி பக்தர்களை கோவிலில் செல்ல அனுமதிக்காமல் பெரும்பாலான ஆளும் கட்சியை சேர்ந்த மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளுடன் கோவிலுக்கு வந்த முக்கிய நபர்களை மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி அளித்தாக ஸ்ரீரங்கம் பக்தர்களால் கூறப்படுகிறது .
 
கோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி பக்தர்களிடம் மனிதனாக இருந்தால் உங்களிடம் பேசமுடியும் என்றும் அநாகரிகமான வார்த்தைகளை பயன் படுத்தி திட்டியதாகவும்
சொல்லபடுகிறது.
 
மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க டி எஸ் பி வேலை செய்கிறார்… அவர் பக்தர்களுக்காக பணியாற்றவில்லை… என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
 
பன்னிரு ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாருக்கு மோட்சம் என அழைக்கப்படும் வைகுண்ட பதவி அளிப்பதே வைகுண்ட ஏகாதசி விழாவின் சிறப்பாகும். வைகுண்ட ஏகாதசி விழாக்கள் முக்கிய வைணவ திருத்தலங்கள் அனைத்திலும் நடைபெற்றாலும் பூலோகமான ஸ்ரீரங்கத்தில் தான் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த முதல் வைபவம் என்பதால் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் புராதனமாக கருதப்படுகிறது.
 
திருநெடுந்தாண்டகத்தை தொடர்ந்து நடைபெற்ற பகல் பத்து உற்சவங்களில் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை 3.45 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் நம்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் பாண்டியன் கொண்டை, கிளி மாலை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டார்.
 
பரமபதவாசலை கடந்து திருக்கொட்டகையில் பிரவேசித்த நம்பெருமாள், திருமாமணி மண்டபம் என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தை சென்றடைந்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் சாதரா மரியாதை, அலங்காரம் அமுது செய்வதை தொடர்ந்து காலை 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்யலாம்.
 
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரையர் சேவையும், 8 மணி முதல் 9 மணி வரை திருப்பாவாடை கோஷ்டி நிகழ்ச்சியும், 9 மணி முதல் 10 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையும், இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை உபயகாரர் மரியாதையும் செய்யப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.
 
இன்று இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும். நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். 27-ந் தேதி மாலை 4.15 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும். ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் நாளான 28-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பரமபதவாசல் திறப்பு கிடையாது.
 
29-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான 30-ந் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் பரமபதவாசலை கடந்து செல்லலாம். 31-ந் தேதி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
 
மறுநாள் இயற்பா நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்டு சொர்க்கவாசல் திறப்பின்போதோ அல்லது நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சென்ற பின்னரோ சொர்க்கவாசல் வழியாக சென்றால் நம்மாழ்வாரை போன்று வைகுண்ட பதவியை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் முக்கிய நபர்களை மட்டுமே செல்ல அனுமதி அளித்து பெரும்பாலான பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் டி எஸ் பி தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது .