சென்னை:
சென்னையில் கே.கே.நகர் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரி வாசலிலேயே மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை கே.கே.நகரில் உள்ளது பிரபல தனியார் கல்லூரி. இந்தக் கல்லூரியில் சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இன்று கல்லூரி வாசல் பகுதியில் அஸ்வினி நின்று கொண்டிருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கே வந்த அழகேசன் என்ற இளைஞர், மாணவி அஸ்வினியை கத்தியால் சரமாரியாகக் குத்தி ஓடியுள்ளார். திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கத்திக் குத்து பட்டதில், ரத்தம் வெளியேறி, மாணவி அஸ்வினி மயங்கிச் சரிந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள், அந்தப் பெண்ணை குத்திவிட்டு தப்ப முயன்ற அழகேசனை விரட்டிப் பிடித்து அடித்து உதைத்து கே.கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அழகேசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்திக் குத்து பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அஸ்வினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அஸ்வினியின் தோழிகள் மற்றும் கல்லூரியில் போலீஸார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அழகேசன்மீது அஸ்வினி ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்றும், அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த மதுரவாயல் காவல்துறையினர் அழகேசன் மீது ஏற்கெனவே கைது நடவடிக்கை எடுத்திருந்ததும் தெரிய வந்தது. எனவே இது பழிவாங்கும் நடவடிக்கையா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.