சகாயமா ? சமந்தாவா ? 

சகாயமா ? சமந்தாவா ? எனும் தலைப்பில் பல்வேறு கேள்விகளுடன்  சமூக ஊடகங்களில் வைரலாக  பரவிவரும் செய்தியில் கூறியுள்ளதாவது :-

சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் , அவர் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த பட்டால் அவருக்கு தான் என் ஒட்டு என்று சமூக வலைதளங்களிலும் பொது வெளிகளிலும் பேசுவதை சமீப காலத்தில் அதிகமாக கேட்க முடிகிறது . சகாயத்தின் நேர்மை மீதோ அவரின் நிர்வாக திறமை மீதோ யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நம்புகிறேன் . ஆனால் நேர்மையாளர்களையும் திறமைசாலிகளையும் இந்த மண் அங்கீகரித்து உள்ளதா என்பதே என் கேள்வி

திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டு அண்ணாவிற்கே ஆலோசனை சொல்லும் இடத்தில இருந்தவர் , நடமாடும் பல்கலைகழகம் என்றும் நாவலர் என்றும் தமிழ் சமூகம் அவரை கொண்டாடியது , பேரறிஞர் அண்ணாவே “தம்பி வா தலைமை ஏற்க வா” என்று திமுக வை வழிநடத்த வாஞ்சையோடு அழைத்தார். இரண்டு முறை இடைகால முதல்வராக இருந்த அந்த நாவலர் நெடுஞ்செழியன் கற்றவர்கள் அதிகம் வசிக்கும் மைலாப்பூர் தொகுதியில் வெறும் 500 வாக்குகள் மட்டுமே பெற்று காமெடி எஸ் வி சேகரை காட்டிலும் பின்தங்கி போனார் .

அரசியலில் ஆயிரம் பிறை கண்டவர் இந்திய அளவில் விரல் விட்டு எண்ண கூடிய சிறந்த நாடாளுமன்றவாதி , நெருக்கடி நிலையின் போது நாடாளுமன்றம் நடுங்க அதை எதிர்த்து பேசியவர் ,நாடாளுமன்ற நடைமுறைகளில் உள்ள சந்தேகங்களை தீர்க்க இன்றைக்கும் இவரை தான் தேடுவார்கள் அப்படிப்பட்ட இரா .செழியன் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் நடிகை வைஜேந்தி மாலாவிடம் தோற்று போனார் .

இரண்டு பிரதமர்களை தேர்வு செய்யும் இடத்தில இருந்த கர்மவீரர் காமராஜர் சொந்த மண்ணில் ஒரு கல்லூரி மாணவனிடம் தோற்று போனார் ,அண்ணாவின் இறுதி ஊர்வலத்திற்கு கூடிய கூட்டம் உலக சாதனை படைத்தது ஆனால் அந்த மனிதர் வாழும் காலத்தில் தான் பிறந்த காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார் .

இன்றைக்கும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாத மாமனிதர் நல்லகண்ணு தொழிலாளர்கள் நிரம்பிய கோவை தொகுதியில் தோற்றார் ,இரா .செழியன் ,நாஞ்சில் மனோகரன் ,முரசொலி மாறன் என்ற வருசையில் இன்றைக்கு எஞ்சியும்,விஞ்சியும் இருக்கும் நாடாளுமன்றவாதி வைகோ தொடர்ச்சியாக இரண்டு முறை விருதுநகர் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார் .

ஆனால் அதே சமயம் பனித்துளியை போல பரிசுத்தமான மோகனை எதிர்த்து அழகிரி வெற்றி பெறுகிறார் ,லேகியம் விற்ற ஜெயதுரை ,நாடாளும் மன்ற நிகழ்வுகளை தொலைகாட்சியில் கூட பார்த்திராத நடிகர் ஜே கே ரித்தீஷ் போன்றவர்கள் பெருவாரியான ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்கள் .
இது தான் இந்த மண்ணின் கள எதார்த்தம் ,புதிதாக ஒருவர் வந்து இந்த அரசியலை புனித படுத்த வேண்டிய அவசியம் இல்லை பல ஆண்டுகளாக இந்த மக்களுக்கு உண்மையாக போராடி வரும் நேர்மையாளர்கள் பலர் உண்டு அவர்களை அங்கீகரியுங்கள் தமிழக அரசியல் தானாக சுத்த படும் .

இல்லை எங்களுக்கு சகாயமே தான் வேண்டும்(பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணும் ) என்றால் தாரளமாக அரசு பதவியை ராஜினாமா செய்ய வைத்து அவரை அரசியலுக்கு இழுத்து வாருங்கள் ,ஆனால் ஒன்று ரெண்டு லட்சம் பேர் திரண்ட நயன்தார வேண்டாம் வெறும் சமந்தாவை எதிர்த்து களமிறக்கி சில கோடிகளை செலவு செய்தால் சகாயம் டெபாசிட் வாங்குவார என்பதே சந்தேகம் தான் .

ஒரு நல்ல ஆட்சி வந்து சகாயம் போன்ற அதிகாரிகளை தக்க இடத்தில பணி அமர்த்தி அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் நியாயமான எதார்த்தமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும் .
பாவம் அந்த மனிதர் மாச சம்பளம் வாங்கி குடும்பத்தை நடத்தி கொண்டு இருக்கிறார் உங்கள் புரட்சி போராட்டத்தில் அவர் சோற்றில் மண்ணை போட்டு விடாதீர்கள் .என்றாவது ஒருநாள் என் தமிழகம் விழிக்காத என்ற ஏக்கத்தில். என்று   சமூக ஊடகங்களில் வைரலாக  பரவிவரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.