தேமுதிக சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் -விஜயகாந்த் அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் 

பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக வருகின்ற 29.12.2015 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, கடலூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும்.
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பலத்த சேதங்களும், உயிரிழப்பும் ஏற்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் இயல்புநிலைக்கு திரும்புவதற்கே பல நாட்கள் ஆனது. ஆனால் அதிமுக அரசின் நிவாரண உதவிகள் ஏதும் அந்த மாவட்டத்திற்கு முழுமையாக கிடைத்ததாக தெரியவில்லை. கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரோ உணவிற்காக மட்டும், 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்றும், மீட்புப்பணி செலவுடன் சேர்த்து, மக்களுக்கு நிவாரணம் வழங்காமலேயே 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டதென சொல்லியிருப்பது அவசியம் விசாரணை செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.
பெரும்பாலான வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்ததால் ஓட்டுமொத்த உடைமைகளையும் இழந்து, வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கின்ற மக்களுக்கு, வேட்டி சேலையும், ஐந்து கிலோ அரிசியும் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்? அதேபோல் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்ததோடு மட்டுமல்லாமல், அந்த நிலங்கள் மழை வெள்ளத்தால் மணல் மூடி, விவசாயமே செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த விவசாய நிலங்களை சீரமைப்பதற்கே பல ஆயிரங்களை செலவிடவேண்டிய நிலை ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க ஒரு ஏக்கருக்கு 5400 ரூபாய் என்ற அளவில் கொடுக்கும் நிவாரணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? மேலும் வேலை இல்லாமல் தொழிலாளர்களும் அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீராணம் ஏரி, பெருமாள் ஏரி போன்ற ஏரிகள் தூர்வாரி ஆழப்படுத்தாததாலும், அதன் கரைகளை உயர்த்தி பலப்படுத்தாததாலும் அதிக அளவில் நீரை தேக்க முடியாமல் ஆறுகளில் திறந்துவிடப்பட்டது. ஆனால் கொள்ளிடம், கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, பெண்ணையாறு போன்ற ஆறுகளில் தடுப்பணை இல்லாததால் பல டி.எம்.சி தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலந்தது. 2004ல் சுனாமி வந்தபோதும், 2012ல் தானே புயல் வந்தபோதும் ஹெலிக்காப்டரில் சுற்றிப்பார்த்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் எப்போதுதான் பாடம் கற்றுக்கொள்வாரோ? சாலை வழியாக காரில் சென்றாவது இதையெல்லாம் தெரிந்துக்கொள்ளவேண்டும். கடந்த பத்தாண்டுகளில் ஒன்றுக்கு மூன்று முறை கடலூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டும், அதை தடுத்திட தேவையான திட்டங்கள் போடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இதுபோன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக வருகின்ற 29.12.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில், கடலூரில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. வெள்ள நிவாரணக் கணக்கெடுப்பில் உள்ள முறைகேடுகள், அதில் அதிமுகவினரின் தலையீடுகள் மற்றும் உடனடியாக வெள்ள நிவாரணம் வழங்காத அதிமுக அரசை கண்டித்தும், பாதிப்பிற்கு ஏற்றவாறு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கவேண்டும். வேலையிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கிடவேண்டும் என்பதை வலியுறுத்தியும், நடைபெறுகின்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் திரளாக கலந்துகொண்டு வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் மக்களின் நலனுக்காக நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிகவை சார்ந்த அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ளவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்