சென்னை: மத்தியில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்த சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம் என்று சந்திரபாபுவுடன் ஆலோசனை நடத்திய பின் ஸ்டாலின் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை சென்னை வந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்திருந்த நாயுடுவை வரவேற்ற ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து அவருடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சிபிஐ உள்ளிட்ட தன்னிச்சையான அமைப்புகளை மிரட்டும் வகையில் மோடி ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மேலும், பாஜக.,வை வீழ்த்த நாயுடுவுடன் ஓர் அணியில் இணைவதாகக் குறிப்பிட்டார்.
பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு தி.மு.க. ஆதரவு உண்டு என்றும் கூறினார். பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள கட்சியின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும், அதன்பிறகு, குறைந்தபட்ச செயல் திட்டம் வகுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் மு.க.ஸ்டாலின்.




