தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது

 

திருச்சி மாவட்டம், முசிறியில் நேற்று தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காவல் துறையினர்கைது செய்தனர்.

முசிறி அருகேயுள்ள தெற்கு திரணியாம்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மனைவி தங்கம்மாள். இவரது மகன் சுப்பிரமணி (மனநலம் பாதிக்கப்பட்டவர்). இவரை கடந்த 1 வாரமாக காணாமல் தங்கம்மாள் பல இடங்களில் தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், முசிறி புதிய பேருந்து நிலைய பகுதியில் தனது மகன் இருப்பதை அறிந்த தங்கம்மாள் அங்கு சென்று, மகனை வீட்டுக்கு வருமாறு கூறி கையை பிடித்து இழுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது தாயை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது தாய் இறந்ததுகூட தெரியாமல் அருகிலேயே அமர்ந்திருந்தார் சுப்பிரமணி.

நடைபெற்ற சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி காவல் நிலையத்தினர் வந்தவுடன் அங்கிருந்து ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.