அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம்

 
 
தமிழக தலைமை செயலாளருக்கு தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் 3 வருடம் பணியாற்றிய அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 20–ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
 
இந்த பட்டியல் வெளியான பின்பும் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
 
தமிழக தேர்தல் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையர்கள் இந்த மாத கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருகிறார்கள். அப்போது அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் நடைபெறும்.
 
வாக்காளர் பட்டியல் வெளியாவதால் 20–ந்தேதி வரை கலெக்டர் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி., ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் தேர்தல் பணியில் சம்பந்தப்பட்ட யாரையும் இடமாற்றம் செய்ய முடியாது. அதற்கு தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டும்.
 
20–ந்தேதிக்கு பிறகு யாரையும் இடமாற்றம் செய்து கொள்ளலாம். இதுபற்றி தேர்தல் கமிஷனின் உத்தரவை மேற்கொள் காட்டி தலைமை செயலாளர் ஞானதேசிகனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
 
31.5.2012–க்கு பிறகு 3 வருடம் ஒரு இடத்தில் பணியாற்றிய அரசு ஊழியர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்யலாம் என்று அதில் கூறி இருக்கிறோம் என்று ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.