புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட மத்திய அரசுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம்

 
மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதியுள்ளார்.
 
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :_
 
தற்போது நாடாளுமன்றம் இயங்கி வரும் கட்டடம் கடந்த 1927ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதாவது, அந்த கட்டடம் கட்டப்பட்டு 88 ஆண்டுகளைக் கடந்து விட்டது.
 
அக்காலத்தில் நாடாளுமன்றத்தில் பணியாற்றிய அலுவலர்கள், பாதுகாவலர்கள், நாடாளுமன்றத்துக்கு வரும் ஊடகத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது.
 
மேலும், தற்போதைய நாடாளுமன்றக் கட்டடமானது, எம்.பி.க்கள், நாடாளுமன்ற செயலகத்தில் பணிபுரியும் அலுவலர்களை கணக்கில் கொண்டே கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதிகரித்து வரும் நாடாளுமன்ற குழுக்கள், பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை போன்ற காரணங்களினால் இடத்தின் தேவையும் அதிகரித்து விட்டது.
 
இதனால், நாடாளுமன்றத்தில் தற்போது போதிய இடவசதியில்லை. இடநெருக்கடி நிலவுகிறது. அத்துடன் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு அதிக காலம் ஆகி விட்டதால், துயரத்தின் சுவடுகளை கட்டடம் வெளிப்படுத்தத் (விரிசல் உள்ளிட்ட பாதிப்புகளை குறிப்பிட்டுள்ளார்) தொடங்கியுள்ளது.
 
பாரம்பரிய கட்டட முதலாவது தரப்பட்டியலில், நாடாளுமன்றக் கட்டடம் இருப்பதால் அதில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் பணியை மேற்கொள்ளவும், விரிவாக்கம், நவீனப்படுத்துதல் பணிகளைச் செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவுகிறது.
 
இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது 550 உறுப்பினர்கள் இருப்பதற்கான இடவசதியே இருக்கிறது. இந்த எண்ணிக்கையானது, அரசமைப்புச் சட்டத்தின் 81(3) ஆவது பிரிவு அமலுக்கு வந்ததும், அதாவது 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்து விடும். அவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அனைவருக்கும் தேவையான இட வசதி தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இல்லை.
 
மேற்கண்ட காரணங்களைக் கருத்தில் கொண்டும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
 
அதுபோல, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டும்போது, அந்தக் கட்டடத்தை இந்திய நாடாளுமன்ற வளாகத்திலேயோ அல்லது ராஜபாதையிலேயோ கட்டலாம். ராஜபாதையில் நாடாளுமன்ற புதிய கட்டடம் கட்டப்படும்பட்சத்தில், அந்தக் கட்டடத்துக்கும், தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் இடையே பூமிக்கடியில் சுரங்கப் பாதை உள்ளிட்டவற்றை அமைத்து தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்று சுமித்ரா மகாஜன்
 
 
அந்த கடிதத்தில் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார் .