அப்துல்கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட அதிகாரிகள் ஆய்வு

 
 
 
இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் உள்ள பேய்க்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டுவது குறித்து மத்தியஅரசின் பாதுகாப்பு,ஆராய்ச்சிதுறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
 
ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பேய்க் கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு தடுப்புகளுடன் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் மணிமண்டபம், அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததால் கடந்த சிலை நாட்களுக்குமுன் அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமதுமுத்துமீரான் லெப்பை மரைக்காயர் கவலை தெரிவித்து இருந்தார்.
 
இந்தநிலையில் தங்கச்சிமடம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாமின் நினைவிடத்தை நேற்று டெல்லியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி துறையின் சார்பில் ராணுவ கர்னல் சவ்பே தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
அப்துல்கலாம் நினைவிடம் தமிழக அரசு மூலம் மத்திய அரசிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டபின் அனைத்து பணிகளும் தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.