இந்து மதத்துக்கு எதிராக நடக்கும் இன்றைய அவதூறு, அழிப்புச் செயல்கள் ஆகியவற்றைக் கண்டு நாம் இப்போதே, இவ்வளவு பயப்படவேண்டுமா என்ற கேள்வி பலர் மனதில் எழும்.
வைதிக இந்து மதத்தை எதிர்த்து சமணம், பவுத்தம் போன்ற இந்திய மதங்கள் இயங்கியிருக்கின்றன. இஸ்லாமிய கிறிஸ்தவ சக்திகள் பல நூறு ஆண்டு காலம் பாரதத்தை அடிமைப்படுத்தி ஆண்டிருக்கும் நிலையிலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்து மதத்தையும் இந்தியாவையும் அழிக்க முடிந்திருக்கவில்லை; எனவே, நாம் இன்றைய முயற்சிகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்று சிலர் சொல்லக்கூடும்.
உண்மைதான்; கடந்த காலத்தில் அந்த நான்கு மதங்களோடு நாத்திகவாதமும் இந்து மதத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறது. பௌத்தம் அது தோன்றிய இந்தியாவில் இருந்து அகன்றுவிட்டது. சமணம் இந்து மதத்தின் ஓர் அங்கமாக உள்வாங்கப்பட்டுவிட்டது. நாத்திகம் அதன் கறாரான ஞான மார்க்க வழிமுறைகளினால் மக்களிடையே வேரூன்ற முடிந்திருக்கவில்லை. பக்தி மார்க்கம், லௌகிகம், வாழ்க்கையைக் கொண்டாடுதல் என இந்து மதம் மக்களுக்கு நெருக்கமாகப் பயணித்து சமண, பௌத்த, நாத்திகவாதங்களை வெற்றிகண்டுவிட்டிருக்கிறது.
ஆஃப்ரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ அமெரிக்காவிலோ இருந்த பழங்குடி சமயங்களையும் சடங்குகளையும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றாக அழித்து அந்தக் கண்டங்களை கிறிஸ்தவ, இஸ்லாமியமயமாக்கிவிட்டிருக்கிறார்கள். அரேபிய, ஐரோப்பாவிலுமேகூட அங்கிருந்த அனைத்து பழங்குடி மரபுகள், சடங்குகள், மதங்கள் ஆகியவற்றை அழித்து ஒற்றைப் பெரும் அடையாளத்தின் கீழ் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். உலகில் ஓநாய்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவை நினைப்பது எவ்வளவு கெடுதலானதோ உலகில் முட் செடிகள் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவை நினைப்பது எவ்வளவு கெடுதலானதோ அதைவிட ஒற்றை மதம் மட்டுமே இருக்கவேண்டும் என்று வல்லாதிக்க மதங்கள் நினைப்பது கெடுதலானது.
அப்படியான கொடூரமான கிறிஸ்தவ இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளால்கூட இந்தியாவையும் இந்து மதத்தையும் பெரிதாக ஒன்றும் செய்யவே முடியவில்லை என்பது உண்மையே. ஆனால், இந்து மதம் கடந்த காலத்தில் அந்தத் தாக்குதல்களை எப்படிச் சமாளித்தது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் நிகழ்காலத்தில் அந்த வல்லாதிக்க மதங்களின் புதிய செயல்பாடுகளைப் பார்த்துக் கவலைப்பட வேண்டுமா வேண்டாமா என்பது தெரியவரும். இந்து ஒற்றுமை, இந்துத்துவத் தற்காப்பு வன்முறை, இந்துத்துவ சமூக சேவை, கிறிஸ்தவ – இஸ்லாமிய அந்நியத்தன்மை என நான்கு அம்சங்கள் கடந்த காலத்தில் இந்து மதத்தைக் காப்பாற்றியிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் நாம் இன்றைக்கான வியூகத்தை வகுத்துக்கொள்ளவேண்டும்.
இந்து ஒற்றுமை
உலகின் பற பகுதிகளில் கிறிஸ்தவ-இஸ்லாமிய ஒற்றைப்படையாக்க முயற்சிகள் வெற்றி பெற்றதற்கு (பெறுவதற்கு) அவற்றின் தந்திர மற்றும் வன்முறை வழிகள் அல்லாமல் வேறு முக்கிய காரணம் ஒன்று உண்டு: அவற்றை எதிர்த்த அந்தந்த தேசத்துப் பழங்குடி மரபுகள் தமக்குள் ஒற்றுமையின்றி இருந்தன. எனவே, வல்லாதிக்க மதவாத சக்திகள் அவற்றை எளிதில் வீழ்த்திவிட்டன. இந்தியாவில் மட்டும்தான் இந்து மதம் என்ற நெகிழ்வான பேரடையாளத்தின் கீழ் அவை ஒன்று சேர்ந்துகொண்டு கிறிஸ்தவ இஸ்லாமியத் தாக்குதல்களை எதிர்கொண்டன. அப்படியாகப் பன்மைத்தன்மையை அடிநாதமாகக் கொண்டிருந்த இந்து ஜாதிய வாழ்வியலானது அரசியல் தேவை கருதி ஒற்றை மதமாக ஓரணியின் கீழ் வந்ததன் மூலமே கிறிஸ்தவ இஸ்லாமியப் படையெடுப்புகளையும் கலாசாரத் தாக்குதல்களையும் முறியடிக்க முடிந்திருக்கிறது.
மராட்டிய இடைநிலை ஜாதியைச் சேர்ந்த சிவாஜி இந்து மதத்தின் ஒருங்கிணைப்பாளராகவே தன்னை முன்னிறுத்திக்கொண்டார். தமிழக இடைநிலை ஜாதிகளைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களும் சோழ சாம்ராஜ்ஜியச் சக்கரவர்த்திகளும் சேரர்களும் இந்து மீட்பர்களாகவே தம்மை நிலைநிறுத்திக்கொண்டுள்ளனர். விஜய நகரப் பேரரசர்களும் கட்டபொம்மன்களும் இந்து மதப் போராளிகளாகவே இஸ்லாமிய கிறிஸ்தவ ஆதிக்கத்தை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். பால கங்காதரத் திலகர் விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் மூலம் இந்து ஒற்றுமையையே முன்னிறுத்தினார். சமண, பௌத்த ஆக்கபூர்வ உள் முரண்களைச் சந்திக்கும்போதும்கூட பக்தி இயக்கமானது அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் கொண்டே தன்னைச் சீரமைத்துக்கொண்டது.
எனவே, ஒற்றைப்படை வல்லாதிக்க மதங்களை எதிர்க்க இந்து ஜாதிப் பன்மைத்துவ சக்திகள் ஒற்றைப்படையாக ஓரணியில் திரள்வது மிக மிக அவசியமே. அதனால்தான் இந்து விரோத சக்திகள் அந்த இந்து ஒற்றுமையை பன்மைத்தன்மைக்கு எதிரான ஒற்றைப்படையாக்கமாகப் பழித்து எதிர்க்கிறார்கள். உண்மையில் அது பன்மைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக உருவாகும் ஒற்றைப்படையாக்கமே. ஒரு தலித்தையும் சூத்திரரையும் ராமரைக் கும்பிடச் சொல்லும்போது தலித், சூத்திர பிரிவினரின் குலதெய்வத்தைக் கும்பிடாதே என்று ஒருபோதும் சொல்வதில்லை. இந்துத்துவத்தின் ஒற்றைக் கடவுள் என்பது ஜாதியப் பன்மைக் கடவுள்களை எதிர்த்து உருவாவதல்ல. கிளை நதிகள் கலந்து பெரு நதி உருவாவதைப் போன்றது அது. பெரு நதிகளின் கரையோரங்களில் வளரும் மரங்கள் உருவாக்கும் மழை மேகங்கள் கிளை நதிகளை நிரப்பி மேலும் செழிப்புறவே செய்யும்.
இந்துத்துவ ஒற்றைப்படையாக்கத்தை எதிர்ப்பவர்களில் யாரேனும் ஒருவர் உலகத் தொழிலாளர்களை ஒன்று திரளச் சொல்லும் கம்யூனிஸத்தையோ உலகம் முழுவதையும் கிறிஸ்தவமயமாக்கவோ இஸ்லாமியமயமாக்கவோ வன்முறையையும் தந்திரத்தையும் பயன்படுத்தும் வல்லாதிக்க மதங்களையோ எதிர்த்து ஒரு வார்த்தையேனும் பேசிக் கேட்டிருக்கிறீர்களா..? ஒற்றுமையாக மேய்ந்துகொண்டிருந்த நான்கு எருதுகளை ஐரோப்பிய-பிரிட்டிஷ் சிங்கம் கொல்ல பெஸ்கிப் பாதிரி நரி சொன்ன வழி நினைவுக்கு வருகிறதா… இந்து மதத்தை அழிக்க இந்துக்களை பிரிக்கவேண்டும் என்று பாடத்தை நரி சொல்லித் தந்திருக்கிறது. அது நமக்கும் ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. வல்லாதிக்க சிங்கத்தையும் தந்திர நரியையும் எதிர்க்கவேண்டுமென்றால் நான்கு மாடுகளும் ஒன்று சேர்ந்தாகவேண்டும் (அவர் காலத்தில்கூட நான்குதான் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது).
ராமன் பெயரில், விநாயகன் பெயரில் அந்த அணி திரளல் நிகழும்போது, “நாங்கள் தலித்கள்… இந்த மேட்டுக்குடி சாமிகள் எங்கள் சாமி அல்ல’ என்று சொல்லும் காஞ்சா அய்லையா போன்றவர்கள் கிறிஸ்துவும் அல்லாவும் எங்கள் கடவுள் அல்ல என்று என்றுமே சொன்னதில்லை.
இப்போது இந்த இடத்தில் இன்னொரு கேள்வி வரும். இந்து மதம் இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து ஜாதிகளையும் ஒன்று சேர்த்து ஒரு பெரு மரபாக ஒற்றைப்படையாக ஆவது சரியென்றால், கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகள் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி செய்வது பல மடங்கு சரியாகத்தானே இருக்கவேண்டும்?




It is very much esdenesse for hindus to come under one banner to take on might of church and islam