சென்னை : தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால், கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லை, தேனி, கோவை மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
கனமழை காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்வதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இன்று ஒரு நாள் மட்டும் மழையின் காரணமாக நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டத்திற்குட்பட்ட தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களுக்குட்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



