ஒவ்வொருவர் தலையிலும் ரூ.31,000 கடன் சுமை; நிர்வாகச் சீர்கேடு அதிகரிப்பு: அடுக்குகிறார் கருணாநிதி

சென்னை:

தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் 31 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கை:

கேள்வி: தமிழக அரசின் நிர்வாகத்தில் சீர்கேடுகள் அதிகமாகி விட்டதாகத் தொடர்ந்து கூறப் படுகிறதே, அதற்குச் சில உதாரணங்கள் கூறுங்களேன்?

கருணாநிதி:- ஒன்றா? இரண்டா? எதைக் கூறுவது? எதை விடுவது? உதாரணம்தானே கேட்கிறீர்கள், கூறுகிறேன். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாடு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடைபெறுவது வழக்கம். ஆனால் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தக் கூட்டம் நடைபெறவே இல்லை. இந்தக் கூட்டம் பற்றி நானே ஒரு சில முறை குறிப்பிட்டும் கூட, அரசு அதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து நிதியோ, அரிசியோ, உதவியோ வேண்டுமென்றாலும், நடக்கிறதோ இல்லையோ, ஏதோ ஒரு கடனுக்காக முதல் அமைச்சர் கடிதம் எழுதி அதை ஊடகங்களுக்கு வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொண்டால் போதுமென்று எண்ணுகிறார்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது வாரம் ஒரு முறை செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் தற்போது மிகப் பெரிய நாசம் ஏற்பட்ட பிறகும், செய்தியாளர்களைச் சந்திக்க முதலமைச்சர் தயாராக இல்லை. அவ்வாறு அலட்சியப்படுத்தப்பட்ட பிறகும், ஒரு சில பத்திரிகைகள் முதலமைச்சரின் புகழ் பாடக் கூசுவதில்லை. முதலமைச்சருக்கு வரும் கோப்புகள் தனித்தனியாகப் பார்க்கப்பட்டு ஆணை பிறப்பிப்பதாகத் தெரியவில்லை. பத்து கோப்புகளை ஒன்றாகச் சேர்த்து, ஒரே பேப்பரில் டைப் செய்து அதிலே ஆணை பெற்று, அந்த ஆணை பெற்ற பேப்பரை நகல் எடுத்து ஒவ்வொரு கோப்பிலும் வைத்து திரும்ப அனுப்புவதாகச் செய்திகள் வந்தன. ஆனால் அரசுத் தரப்பில் யாரும் இதுவரை அதை மறுக்கவில்லை.

தமிழகத்தைத் தேடி வந்த தொழில்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்குச் சென்று விட்டது பற்றி பெரிய புகார் கூறப்பட்டது. அதற்காக முதலீட்டாளர் மாநாடு நடத்தப் போகிறோம் என்று அரசு அறிவித்து இரண்டு மூன்று முறை ஒத்தி வைத்து பிறகு 100 கோடி ரூபாய்ச் செலவில் நடத்தப்பட்ட போது, முதலமைச்சர் ஜெயலலிதா 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும், அந்தத் தொழில்களுக்கு எல்லாம் ஒரே மாதத்தில் அனுமதி கொடுக்கப்படும் என்று மிகப் பெரிய விளம்பரங்கள் செய்து அறிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு 3 மாதங்கள் முடிந்த நிலையிலும், யாருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு, தொழில்கள் தொடங்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே நடைபெற்று வந்த தொழில்களுக்கு மூடுவிழாதான் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைந்து விட்டது என்று சொல்கிறார்கள். தமிழக அரசின் கடன் சுமை நான்கு இலட்சம் கோடி ரூபாய். தி.மு. கழக ஆட்சியில் கடன் சுமை ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருந்தபோது, கழக அரசை மிகவும் தாக்கி ஒவ்வொருவர் தலையிலும் பதினைந்து ஆயிரம் ரூபாய் கடன் சுமையை கருணாநிதி ஏற்றி வைத்து விட்டார் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் 31 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஜெயலலிதா ஏற்றி வைத்துள்ளார். அந்தத் துறை, இந்தத் துறை என்றில்லாமல், இந்த அரசின் எல்லாத் துறைகளிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

அரசுப் பணிகள் எதற்கு ஆள் எடுத்தாலும், லஞ்சம் கொடுக்காமல் வேலை கிடைப்பதில்லை. பல துறைகளில் பணிகள் நடக்காமலேயே ஏட்டளவில் நடந்ததாக கூறப்படுகிறதாம். சென்னையிலும், அதன் சுற்றுப்புற மாவட்டங்களிலும் அண்மையில் பெருமளவுக்கு வெள்ள நாசம் ஏற்பட அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேடும் முடிவெடுப்பதில் தாமதமும்தான் காரணம் என்று அனைத்துக் கட்சியினராலும் ஆதாரங்களோடு குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு இன்று வரை முதல்வரிடமிருந்து உரிய பதில் வராததில் இருந்தே, அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்றாகின்றன.அந்த நாசங்களுக்குப் பிறகு, மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெற்று, நிவாரணங்கள் அளிப்பதிலும் இந்த அரசில் தவறுகள் பலவாறாய் நடைபெறுகின்றன.

முதல்வர் தலைமைச் செயலகத்திற்கு வருவதே எட்டு காலச் செய்தியாக உள்ளது. வழியெங்கும் பெரிது பெரிதாக “ப்ளக்ஸ் போர்டுகள்” அமைச்சர்களால் வைக்கப்பட்டு அதன் பிறகுதான் வருகிறார். அப்படியே வந்தாலும் ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கு மேல் இருப்பதில்லை. வந்தவுடன் ஒருசில போட்டோக்கள் அரசின் செய்தித் துறையினரால் எடுக்கப்பட்டு நாளேடுகளுக்குத் தருகின்ற ஒரு பணிதான் நடைபெறுகிறது. அந்தப் புகைப்படங்களை நேரடியாக எடுப்பதற்குக்கூட ஊடகங்களின் புகைப்படக்காரர்களுக்கு அனுமதி இல்லை.

இது குறித்து யாரும் முணுமுணுப்பது கூட இல்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவாக வந்து முதலமைச்சருக்கு நேராக அமர்ந்து கொண்டு ஏதோ கலந்தாலோசனைக் கூட்டம் நடப்பதைப் போல புகைப்படம் எடுக்க மட்டுமே உரிமை உண்டு. எந்தக் கோப்பு பற்றியும் முதலமைச்சரிடம் சுதந்திரமாகப் பேசவோ, விவாதிக்கவோ அவர்கள் அனுமதிக்கப் படுவதாகத் தெரியவில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் என்பது இந்த ஆட்சியில் அரிதாகிவிட்டது. ஆனால் தற்போது அமைச்சரவைக் கூட்டங்களே நடைபெறுவதில்லை என்று சொல்கிறார்கள். ஒருவேளை முதலமைச்சர் தனக்குத் தெரியாததையா அமைச்சர்கள் கூறி விடப் போகிறார்கள் என்று எண்ணுகிறாரோ என்னவோ? அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பதையே மறந்து விட்டாரோ?

ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் பெயரால் எந்தெந்த திரையரங்குகள் வாங்கப்பட்டன என்பது பற்றி பக்கம் பக்கமாக ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திகள் தொடர்ந்து ஆதாரங்களோடு வெளியிட்ட பிறகும், காட்பாடியில் பாலாஜி தியேட்டர், பட்டுக்கோட்டையில் அன்னபூர்ணா தியேட்டர் என்றும் வாங்கியிருக்கிறார்கள் என்ற செய்திகள் ஆதாரத்தோடு வெளிவந்த பிறகும், அந்த ஊழலுக்குத் தொடர்பானவர்கள் ஜெயலலிதா வீட்டிலேயே எப்போதும் போலச் செல்வாக்கோடு வாழ்கிறார்கள் என்றும் விளக்கிய பிறகும், அதற்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை.

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொள்கிற மாநாடு 2013-க்கு பிறகு நடத்தப்படவேயில்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு வேலை முடிந்ததாக முதல்வர் நினைக்கிறார். 100 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் வந்ததாக அரசு கூறியது. ஆனால், அது நடந்து முடிந்து 3 மாதங்கள் முடிந்த நிலையிலும் தொழில்கள் தொடங்கப்படவில்லை. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைந்து விட்டது என்கின்றனர்.

கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளது நியாயமானது தான். ஆனால், நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்க கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு அளித்த ரூ.1,500 கோடி செலவு செய்யப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலின் போது சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் பதிப்பகங்களையும் பாதிப்படைய வைத்துள்ளது. இதனால், ரூ.25 கோடி இழப்பு இருக்குமென்று பதிப்பகத்தார் கூறுகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அரசு முன் வந்ததாக தெரியவில்லை.

இப்படியே அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்தையும் சொல்ல இங்கே இடம் போதாது! இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.