161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை:
அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்ட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

 இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன்  உள்ளிட்ட 7 தமிழர்களையும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432&ஆவது பிரிவின்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்ட நிலையில், அவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என்ற வினா எழுந்துள்ளது. அவர்களை விடுதலை செய்ய மாற்றுவழி இருக்கும் போதிலும் அதை பயன்படுத்த தமிழக அரசு தயங்குவது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், இராபர்ட் பயாஸ் ஆகிய 7 தமிழர்களுமே இராஜிவ் கொலை வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டவர்கள் தான். இவ்வழக்கில் பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை வேண்டுமென்றே திரித்து பதிவு செய்ததாக அந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் அளித்த ஒப்புதல் வாக்குமூலமே இதை நிரூபிக்கும். தவறாக தண்டிக்கப்பட்ட இவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களிலாவது அரசு கருணை காட்டியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோரில் நளினியின் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மூவரும் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருந்தனர். அவர்களின் கருணை மனுக்களை 12 ஆண்டுகளாக ஆய்வு செய்த குடியரசுத் தலைவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார்.

இதில் ஏற்பட்ட கால தாமதத்தைக் காரணம் காட்டி அவர்கள் மூவரின் தூக்கு தண்டனையை கடந்த ஆண்டு பிப்ரவரி பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. ஆனால், அதற்குப் பிறகும் அவர்களால் சிறையிலிருந்து மீள முடியவில்லை.

பேரறிவாளன் உட்பட இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 ஆவது பிரிவின்படி தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியது. ஆனால், மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திய வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கவோ, விடுதலை செய்யவோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முட்டுக்கட்டை போட்டது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், எழுவரின் விடுதலை கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் இன்னும் தீர்ப்பளிக்கப்பட வில்லை என்ற போதிலும், இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்திருப்பதால், 7 தமிழர்களையும் 432&ஆவது பிரிவின்படி விடுதலை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பது உறுதியாகிவிட்டது.

குற்றமே செய்யாமல் தண்டிக்கப்பட்ட 7 பேரும் 25 ஆண்டுகளாக சிறை விடுப்பு கூட வழங்கப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் திரும்பப்பெற முடியாத இளமைப் பருவத்தை சிறைக் கொட்டடிகளில் இழந்து விட்டனர். ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 10 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 7 ஆண்டுகளிலும் விடுவிக்கப்படும் நிலையில், அப்பாவிகளான இவர்கள் ஆயுள் முழுவதும் அடைபட்டுக் கிடக்க வேண்டும் என சிலர் விரும்புவது என்ன மாதிரியான மனநிலை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களவைத்தேர்தலில் வாக்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காக, அதற்கு முன்பாக 7 தமிழர்களின் விடுதலை செய்வதைப் போன்று நாடகங்களை அரங்கேற்றிய தமிழக ஆட்சியாளர்கள், இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது நமது சாபக்கேடாகும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 ஆவது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்வதற்கு தான் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே தவிர, அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மற்ற அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ள எந்த முட்டுக்கட்டையும் போடவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்கீழ், எந்த ஒரு வழக்கிலும் ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவோ, இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ ஆளுனருக்கு விரிவான அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஆளுனர் செய்ய முடியும். மத்திய அரசு புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகள், மாநில காவல்துறை விசாரித்த வழக்குகள் என்ற எந்த வித்தியாசமும் இந்த பிரிவுக்கு இல்லை. இதேவழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை இந்த பிரிவை பயன்படுத்தி தான் 2000&ஆவது ஆண்டில் குறைக்கப் பட்டது என்பதால் அதையே இதற்கான முன்னுதாரணமாக காட்ட முடியும். இப்போதைய தேவையெல்லாம்  25 ஆண்டுகளாக சிறைக்கொட்டயில் வாடிக்கொண்டிருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருணை தமிழக ஆட்சியாளர்களின் மனதில் ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

எனவே, மாநில அமைச்சரவையை உடனடியாக கூட்டி, 161 ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு ஆளுனருக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன்மீது ஆளுனரை உடனடியாக முடிவெடுக்க வைத்து புத்தாண்டில் 7 தமிழர்களும் விடுதலையாவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.