
புது தில்லி: கர்நாடக சங்கீத இசை ரசிகர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் தில்லி இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டி.எம்.கிருஷ்ணா. கர்நாடக இசை கலைஞரான இவர், கச்சேரிகள் பல செய்தவர். ஃபியூஷன் மியூசிக் என்று, மேற்கத்திய கர்நாடக இசைகளைக் கோத்து ஜிம்மிக்ஸ் செய்தவர். இசையில் கலப்பை ஜீரணிக்க முடியாமல் ஏதோ ஏற்றுக் கொண்ட பாரம்பரிய கர்நாடக இசை ரசிகர்கள், கர்நாடக இசையில் மதக் கலப்பை சகிக்க முடியாமல் குமுறித் தள்ளினார்கள்.
அண்மையில், கிறிஸ்துவ மதமாற்ற பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக ஓ.எஸ். அருண் அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அவர் அந்த மதமாற்ற நிகழ்ச்சியில் போய் பாடுவதை ரத்து செய்தார்.
தொடர்ந்து, கர்நாடக இசையில் கிறிஸ்துவ பாடல்களை சில கர்நாடக கலைஞர்கள் பாடியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது டி.எம்.கிருஷ்ணா, தாம் மாதம்தோறும் ஏசு கிறிஸ்து மற்றும் அல்லா குறித்து கர்நாடக இசையில் பாடல்களை வெளியிடுவேன் என டுவிட்டரில் தெரிவித்தார்.
இது பாரம்பரிய கர்நாடக ரசிகர்களை, இந்து மதத்தின் மீது பற்று கொண்டிருக்கும் பலரை கோபமும் வருத்தமும் அடையச் செய்தது. இத்தனை நாட்களாக மேடையேற்றி அழகு பார்த்து, இசையை ரசித்து ஆதரவு அளித்து வந்த நிலையில், தம் அபிமான பாடகர் இவ்வாறு மத விரோதச் செயல்களில் ஈடுபடுவது கண்டு டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் பலர்.

தொடர்ந்து, கர்நாடக கச்சேரி மேடையில் பாரம்பரிய வேஷ்டி சட்டை, ஜிப்பா அணிந்துதான் பாட வேண்டுமா? கைலி கட்டிக் கொண்டு பாடினால் காத்துதான் வருமா பாட்டு வராதா என்று கோணங்கித் தனம் செய்தார் டிஎம்.கிருஷ்ணா. இப்படிப்பட்ட நிகழ்வுகள், இசை ரசிகர்களை கோபமூட்டின.
இதனிடையே, தில்லியில், நவ.17, 18ஆம் தேதிகளில் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட சில கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டில்லி நேரு பூங்காவில் நடக்க இருந்த இந்த நிகழ்ச்சிக்கு இந்திய விமான நிலையங்களின் ஆணையமான ஏ.ஏ.ஐ., ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு, சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஏ.ஐ., அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிகழ்ச்சியை எப்படியாவது நடத்தலாம் என தில்லி அரசு முயற்சி செய்து வருகிறது.
டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பாரம்பரிய கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்பும் ரசிகர்கள் மற்றும் இந்து அமைப்புகள் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில், பாரம்பரிய பாரதீய கலாசார சிதைவுப் பணிகளையே கொள்கையாகக் கொண்டுள்ள கம்யூனிஸ இயக்கங்கள், டி.எம்.கிருஷ்ணாவுக்கு கைகொடுத்துள்ளன. டிவிட்டரில் பெரும் போரே நடத்தும் அளவுக்கு, இந்து அமைப்புகள், மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த விஐபி.,க்கள், எழுத்தாளர்கள் என பலரும் களம் இறங்கியுள்ளனர்.
“When a scholar is prevented from speaking, that is intolerance. But to prevent a great musician from performing in the national capital is not mere intolerance — it is barbarism”: Ramachandra Guha bats for @tmkrishna in the @indianexpress. pic.twitter.com/NbYwtrCIjN
— churumuri (@churumuri) November 15, 2018



