வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஊழல்: பிரச்னை எழுப்புகிறார் ராமதாஸ்

சென்னை:
வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஊழல் என்றும், ஏழைகளுக்கு சரியாக சேரவில்லை என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் பிரச்னை எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

வரலாறு காணாத மழையும், வெள்ளமும் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து சென்னையும், மற்ற மாவட்டங்களும் மீண்டு வந்து விட்டதாக கூறப்பட்டாலும், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல, அவர்களுக்கு உதவ வேண்டிய அரசு, அதை செய்யாமல் அவர்களின் துயரத்தை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது.

சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெய்த மழையால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பல இடங்களில் 12 அடி உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கிறது; தரைத் தளத்தை தாண்டி முதல் தளத்திலும், இன்னும் சில இடங்களில் இரண்டாவது தளத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகனம் நிறுத்துமிடத்தை தாண்டி முதல் மாடிக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. இதனால் அந்த வீடுகளில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களால் பல நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. இதனால் அவர்களின் வேலையும், வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குவது தான் முறையாகும்.

ஆனால், சென்னையில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கணக்கெடுக்கும் பணி கடந்த 10 ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே ஏராளமான குளறுபடிகளும், முறைகேடுகளும், ஊழல்களும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் ஒரு பகுதியில் கூட கணக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பது தான் சரியான அணுகுமுறை ஆகும். ஆனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் ஆளுங்கட்சியினர் ஏற்பாடு செய்யும் பகுதிகளில் அமர்ந்து கொண்ட கணக்கெடுப்புக் குழுவினர், அப்பகுதி மக்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து விவரங்களைச் சேகரித்தனர். இது குறித்த விவரம் தெரியாதவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் விவரங்களை தெரிவிக்க முடியவில்லை. இதனால் தமிழக அரசின் நிவாரண நிதி பெறுவோர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இன்னொருபுறம் ஆளுங்கட்சியினர் கைகாட்டுவோர் அனைவரின் பெயர்களும் எந்தவித பரிசீலனையும் இல்லாமல் பட்டியலில் சேர்க்கப் பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவ பலரது பெயர்கள் தனித்தனி குடும்பங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் வெள்ளத்தால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நிவாரண நிதி கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சென்னையின் பல பகுதிகளில் போராட்டம் நடத்துவது தொடர்கதையாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து நிவாரண உதவி குறித்த கணக்கெடுப்பில் விடுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அந்தந்த பகுதிக்கான வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என வாய்மொழியாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க குவிகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்களைப் பற்றிய முழு விவரங்களை வாங்குவதற்கு பதிலாக தொலைபேசி எண்களை மட்டும் வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவதாகக் கூறப்படுகிறது. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் ஆளுங்கட்சியினர் நடத்திய ஊழலும், முறைகேடுகளும் தான்.

தொலைபேசி எண்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? என்று அதிகாரிகளிடம் கேட்டால், அதன் மூலம் முகவரியை பெற்றுக் கொண்டு ஆய்வு நடத்த வருவோம்; அதன் பிறகு உங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று பதிலளிக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு பொறுப்பான பதில்? எந்த அளவுக்கு பொறுப்பான செயல் என்பதை அரசு தான் விளக்க வேண்டும். முதல்முறை கணக்கெடுப்பு நடத்தியபோதே சரியாக செய்வதை விடுத்து, தொலைபேசி மூலம் முகவரி வாங்கிக் கொண்டு அதற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்குவது என்பது கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து கொக்கை பிடிப்பதற்கு ஒப்பானது ஆகும். முதல் முறை நடைபெற்ற கணக்கெடுப்பிலேயே குளறுபடிகள் நடைபெற்ற நிலையில், செல்பேசி எண்களை மட்டும் வைத்துக் கொண்டு நிச்சயமாக பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கிட முடியாது.

எனவே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.5,000 நிதி போதுமானது அல்ல என்பதால் நிவாரண நிதியை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க தமிழகஅரசு முன்வர வேண்டும்.