24-03-2023 4:43 AM
More
    Homeசற்றுமுன்மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன்: மு.க.ஸ்டாலின்

    To Read in other Indian Languages…

    மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன்: மு.க.ஸ்டாலின்

    stalin cyclone area - Dhinasari Tamil

    மக்களின் கோபம் புயலை விட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன் என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    புயல் பாதித்த பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின், இன்று அது குறித்து ஒரு கடித அறிக்கையை வெளியிட்டார். அவரது அறிக்கையில்…

    கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் நேரடியாக ஆய்வு செய்தபடி, களத்திலிருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    நேற்றைய நாள் (17-11-2018) பெரும் மனச்சுமை மிக்கதாகத் தொடங்கியது. காலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிக்கு கடற்பகுதியே கஜா புயலின் சீற்றத்தால் சின்னாபின்னமாகிக் கிடந்ததைக் காண்பதற்கு மனதிடமில்லை. குடிசை வீடுகள் சிதைந்திருந்தன. மரங்கள் சாய்ந்திருந்தன. மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. வாழ்விழந்த மக்கள் அபயக்குரல் எழுப்பி உதவி கோரினர். அவர்களின் கண்ணீரும் வேதனையும் கடித வரிகளால் விவரிக்க முடியாதவை.

    அங்கிருந்து காரைக்கால் பகுதி வழியாக நாகப்பட்டணம் அக்கரைப்பேட்டைக்கு வந்தபோது நெஞ்சம் பதறியது. புயல் சின்னம் ஏற்படும்போதெல்லாம் பாதிப்படைகின்ற தமிழகக் கடலோரப் பகுதிகளில் முதன்மையானது நாகை. கஜா புயலும் நாகையைப் புரட்டிப் போட்டிருந்தது. கடற்கரையையொட்டி நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் நூற்றுக்கணக்கில் சேதமடைந்துள்ளன.

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்தே புகழ்பெற்ற நாகை ரயில் நிலையம் சிதிலமடைந்திருக்கிறது. மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து, பகலையும் இருளாக்கிவிட்டன. வயல்கள், மரங்கள், குடிசைகள் என எதையும் இயற்கையின் சீற்றம் விட்டு வைக்கவில்லை. நேரில் பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்களின் அபயக் குரலும், ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் வெளிப்படுத்திய அவநம்பிக்கையும் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

    கஜா புயல் கரை கடந்த வேதாரண்யம் பகுதி உருக்குலைந்து கிடக்கிறது. துண்டிக்கப்பட்ட தீவாக அங்குள்ள மக்கள் பரிதவித்துக் கிடக்கும் அவலமும், போக்குவரத்து – தொலைத்தொடர்பு ஆகியவை முற்றிலும் இழந்த நிலையும் இன்னும் எத்தனை நாட்கள் கழித்து அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. கண்ணீருடன் கைக்கூப்பி கும்பிட்ட அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் கலங்கி நின்றேன்.

    கடந்து செல்ல முடியாத அளவுக்கு பாதையும் மனதில் பாரமும் பாடுபடுத்த, இரண்டாவது நாளாகவும் 18-11-2018 அன்று பயணம் தொடர்ந்தது. திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை என கஜா புயலின் கொடுந் தாக்குதலுக்குள்ளான பகுதிகளை நோக்கிச் சென்றபோது, இந்த இழப்புகளிலிருந்து மக்கள் எப்படி மீளப்போகிறார்கள் என்ற கவலையும் அதிர்ச்சியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு போன்ற பகுதிகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்து கொண்டிருக்கின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மின்சாரம், பெட்ரோல் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கிடைக்கவில்லை.

    பல கிராமங்களில் மண்ணெண்ணெய் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள்.
    பருவக்காற்று வீசும் காலங்களில் இயற்கைச் சீற்றம் என்பது தவிர்க்க முடியாததுதான். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் ‘மனோகரா’ திரைப்படத்தில், ‘எரிமலை குமுறும் முன் எச்சரிக்கை செய்வதில்லை’ என்று இயற்கை சீற்றத்தின் தன்மைப் பற்றி எழுதியிருப்பார்.

    stalin cyclone area2 - Dhinasari Tamil

    கஜா புயல் கரை கடக்கும் வரை கடலில் அதன் மெதுவான நகர்வும், அதுவரை மிகக் குறைந்த அளவில் இருந்த மழைப்பொழிவும் புயலின் தன்மைப் பற்றி மக்கள் உணரமுடியாத அளவுக்கு இருந்தது. எனினும், இன்றைய அறிவியல் – தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கைக்கோள்களின் உதவியுடன் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நிலை, அதன் நகர்வு, அது கரை கடக்கும் இடம், நேரம், வேகம், அதனால் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்த தகவல்கள் தொடர்ந்து கிடைக்கின்றன.

    கஜா புயல் குறித்து மத்திய அரசின் துறைகளும், வானிலை ஆய்வு மையமும் அளித்த முன்னெச்சரிக்கை தகவல்களை மாநில அரசின் பேரிடர் மேலாண்மை வாரியம் உடனுக்குடன் வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுரை வழங்கியது.

    அரசியல் மாச்சரியமின்றி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிப்படையாகப் பாராட்டி இருந்தேன். அதற்காக விமர்சனங்களும் வெளிப்பட்டன. ஆக்கப்பூர்வமான முயற்சியை ஆதரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் நலன் என்பதுதான் என் பார்வை.

    அதே நேரத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட போதுதான், புயல் வீசிய அந்த இரவில் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் விடிய விடிய பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்களே தவிர, சரியான – முறையானத் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், படுக்கை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் போதுமான அளவில் செய்யப்படவில்லை.

    பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் எந்தெந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எந்தத் திட்டமிடலும் இல்லை. பருவக் காற்றும் மழையும் தொடங்குவதற்கு முன்பே சீர் செய்யப்பட்டிருக்க வேண்டிய நீர் நிலைகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

    குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்துகிறோம் என முதலமைச்சரில் தொடங்கி அமைச்சர்கள் வரை சொன்னதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை கஜா புயல் அம்பலப்படுத்திவிட்டது. முறையாக இந்தப் பணிகளைச் செய்திருந்தால் டெல்டா மாவட்டங்களில் மரங்களையும் பயிர்களையும் பெருமளவு காப்பாற்றியிருக்கலாம். அரசாங்க கஜானாவைக் கொள்ளையடிப்பதற்காகவே நடைபெறும் கமிஷன் – கலெக்ஷன் – கரப்ஷன் ஆட்சியில் குடிமராமத்து என்ற பெயரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் மட்டும் வளம்பெற்று, பொதுமக்களைப் புயலுக்குப் பலியாக்கியிருக்கிறார்கள்.

    உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்குகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை உயர்கிறது. அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி போதாது. 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். எண்ணற்ற கால்நடைகள், ஏராளமான மரங்கள், வீடுகள் எனப் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் நிலைமையினை நேரில் காணும்போது இந்த இழப்புகளை மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கவலையும் வேதனையும் அதிகரிக்கிறது. 102 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. பல்லாயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. முழுமையாக மின்வசதி திரும்புவதற்கு குறைந்தபட்சம் ஒரு வார காலம் ஆகும் என்ற நிலைமைதான் உள்ளது.

    7000 ஹெக்டேரில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பேராவூரணியில் பாதிப்புகளைப் பார்வையிட்டபோது, விவசாயி ஒருவர் என்னிடம் தனது மனுவைக் கொடுத்தார் அதை படித்துப் பார்த்த போது கலங்கிவிட்டேன். “இந்த பகுதியில் மட்டும் 2 லட்சம் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. ஒவ்வொரு விவசாயிக்கும் சராசரியாக 200 மரங்கள் விழுந்துவிட்டது. சிலருக்கு 1000 மரங்கள் விழுந்துவிட்டன” என்று சொல்லியிருந்தார். இப்படி ஒவ்வொரு பகுதியாக எடுத்தால் பல்லாயிரக் கணக்கான தென்னை மரங்கள் அழிந்துள்ளன.

    ஒரு தென்னையின் வயது 40 முதல் 50 ஆண்டுகள் வரை இருக்கும். அதனை வளர்க்கப் பெரும் பாடுபட்டுள்ளனர். அவைதான் விவசாயிகளின் நிரந்தர வாழ்வாதாரம். அவற்றை இழந்துள்ள நிலையில், விழுந்த தென்னைக்கு பதிலாக புதிய தென்னை வைத்தால் பலன்தர ஏழு ஆண்டுகள் ஆகும். அதுவரை அவர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு தென்னைக்கும் தலா 50 ஆயிரம் வழங்கினால் தான் தென்னை விவசாயிகள் ஓரளவாவது மீண்டு வருவார்கள்.

    புயல் வீசிய பகுதிகளில் வாழைத் தோப்புகளின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை. மா, புளி, வேம்பு, தேக்கு எனப் பயன் தரும் மரங்கள் பலவும் வீழ்ந்துவிட்டன. தேங்கியுள்ள தண்ணீரை வடித்து, சாய்ந்துள்ள வாழைகளை நிமிர்த்தி, தேவையான ஊட்டம் நிறைந்த உரத்தினைக் கொடுத்தால் அவற்றைக் காப்பாற்றலாம் என வேளாண் ஆராய்ச்சி மைய வல்லுநர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் இந்த ஆட்சியாளர்களின் காதுகளில் எந்தளவுக்கு சென்று சேர்ந்துள்ளது என்று தெரியவில்லை.

    நான்கு நாட்களாகப் பரிதவிக்கும் மக்களை நேரில் பார்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரமும் இல்லை, மனதும் இல்லை. ஏற்கனவே, திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடும் திட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக ஒரு முதலமைச்சர் சொல்கிறார். பேரிடர் காலங்களில் சராசரி மனிதர்களுக்கே இதயம் துடிதுடிக்கும். தங்களால் முடிந்த அளவில் உதவி செய்வோம் என்ற எண்ணத்துடன் ஓடோடிப்போய் உதவுவார்கள்.

    முதலமைச்சராக இருப்பவருக்கு தனது மாநிலத்தின் மக்கள் படும்பாட்டைக் கண்டு இதயம் துடிதுடித்திருக்க வேண்டாமா? ரிப்பன் வெட்டவும், கொடி அசைக்கவுமான நிகழ்ச்சிகளுக்காக புயல் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடுவதைத் தள்ளிப் போடுகிறார் என்றால் முதலமைச்சருக்கு இருப்பது இருதயமா? இரும்பா? அல்லது உள்ளம் இருக்க வேண்டிய இடத்திலே பெரிய பள்ளம் மட்டுமே உள்ளதா?

    தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கடைசிவரை முதலமைச்சர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. இப்போது கஜா புயல் தாண்டவமாடிய நிலையில், வேறு எங்கோ சுற்றிக்கொண்டு, சென்னை – சேலம் எட்டு வழிச்சாலையை அமைப்போம் என்று முதலமைச்சர் கூறுகிறார் என்றால் விவசாயிகளையும் பொதுமக்களையும் இதைவிட மோசமாக அலட்சியப்படுத்த முடியுமா? ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல சொந்தக் காரணங்களுக்காக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

    முதலமைச்சர் எவ்வழியோ மற்ற அமைச்சர்களும் அதே வழிதான். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்தத் தொகுதியான பாபநாசம் புயலால் சர்வநாசம் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பாதிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

    மன்னார்குடி நகரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துவிட்டன. வீசிய புயலிலும் கொட்டிய மழையிலும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். ஆனால், உணவு அமைச்சர் காமராஜ் அவர்களின் வீடு மன்னார்குடியில்தான் உள்ளது.

    அவர் நேரில் வர முடியாவிட்டாலும் -மனமில்லாவிட்டாலும் அதிகாரிகளையாவது அனுப்பி, வீழ்ந்த மரங்களை அகற்றிப் போக்குவரத்தை சரிசெய்ய ஆவன செய்திருக்கலாம். ஆனால், அவரது வீடு உள்ள தெருவிலேயே மரங்கள் விழுந்தபோதும் ஆட்சியாளர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

    வேதனை ஆரண்யமாகக் காட்சியளிக்கும் வேதாரண்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். பெயரளவுக்கு நகரப் பகுதிகளை சுற்றி வந்து ஊடக வெளிச்சத்திற்குத் தன்னை முன்னிறுத்திக் கொண்டவரால், வாழ்க்கை இருளான கிராமப்புற மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. குடிநீர், உணவு, மின்சாரம் என எந்த வசதியும் இல்லாமல் திண்டாடிய கிராமமக்கள் கோபம் கொண்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் தாமதமாக வந்த அமைச்சரின் அரசாங்க கார் முற்றுகையிடப்பட்டதால், அவர் காரிலிருந்து இறங்கி சுவர் ஏறிக் குதித்து தப்பித்து ஓட வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க மகளிர் அணியைச் சேர்ந்த கமலம் அவர்கள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சொல்லி இருக்கிறார் மக்களைப் பற்றிய அக்கறை அமைச்சருக்கு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதாக சொல்லவாவது வேண்டும். அதை விடுத்து, “உங்கள் கட்சி எம்.எல்.ஏ.வைக் கேளுங்கள்” என்று எரிந்து விழுந்துள்ளார். அமைச்சர் சென்றபிறகு, கமலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதைப்போல அராஜகம் வேறு இருக்க முடியுமா? பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு, அ.தி.மு.க.வுக்கு மட்டும் தான் அமைச்சரா? எல்லோருக்கும்தான் அவர் அமைச்சர். புயலால் இதுவரை கண்டிராத சேதத்தை சந்தித்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் பாதிப்புகளை மீடியாக்களில் காட்டக் கூடாது என்று ஊடகங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டுவதாகவும், நிருபர்களையும் கேமராக்களையும் ஊருக்குள் விடாமல் தடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

    பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. ஒவ்வொரு மக்கள் கையிலும் இருக்கும் செல்போன் மூலமாக பாதிப்புகளை எடுத்து பரப்பி வருகிறார்கள். இந்த கொடூரமான சோக நேரத்திலும் அராஜகம் செய்வதை விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அ.தி.மு.க. அமைச்சர்களோ புண்பட்டிருக்கும் மக்களின் உணர்வுகளின் மீது ஊசி கொண்டு குத்திக் கிழிக்கிறார்கள்.

    வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், அடிக்கடி புயல் வந்தால்தான் குடிநீர் பஞ்சம் தீரும் என பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியிருப்பது அறியாமையா, ஆணவமா, தமிழ்நாட்டிற்குப் பிடித்த சாபக்கேடா எனத் தெரியவில்லை. முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரையிலான மக்கள் விரோத நடவடிக்கைகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் புயலைவிடவும் மோசமான நிலைமையை உருவாக்கியுள்ளது.

    பல இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மக்கள், தங்கள் கோபத்தை ஆறுதல் சொல்ல வருவோரிடமும் காட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பாதிப்புகளைப் பார்த்துவிட்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வந்தபோது, அங்கே போராடிக்கொண்டிருந்த மக்கள் என்னிடமும் கோபக் குமுறலைக் கொட்டினர். அவர்களின் நியாயமான உணர்வைப் புரிந்துகொண்டு, ஆறுதல்படுத்தித் திரும்பினேன்.

    மக்களின் கோபம் தார்மீகமானது. 4 நாட்களாக அடிப்படைத் தேவைகள் இல்லாத நிலையில் அவர்கள் கோபப்படுவதைத் தவிர என்ன செய்ய முடியும்? மின்சாரம், போக்குவரத்து வசதிகள் முடங்கியுள்ளதால் பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனப் புயல் பாதிப்பு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் வைக்கும் கோரிக்கை நியாயமானது. அதனை உயர்கல்வித்துறை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    பல இடங்களில் போக்குவரத்து முடங்கிப் போயுள்ளது. பாதிப்படைந்துள்ள சாலைகள், குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுவதில் தன்னார்வலர்களும் இளைஞர்களும் காட்டுகின்ற அக்கறையை ஆட்சியாளர்கள் காட்டுவதில்லை எனப் பொதுமக்கள் குமுறுகிறார்கள். அரசு அலுவலர்களும் அரசு ஊழியர்களும் இந்தப் பேரிடர் காலத்தில் மேற்கொண்டு வரும் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரமாக இருக்கின்றன. ஆனால், அவர்களையும் பணி செய்யவிடாதபடி ஆளுந்தரப்பினர் செய்யும் அடாவடிகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளன.

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் திருமதி. செல்வி அவர்கள் மீது கீழ்வேளூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாக்குதல் நடத்தி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு, நிவாரணப் பணிகளை முடக்கியிருக்கிறார்.

    இதுகுறித்து வட்டாட்சியர் வரை புகார் தெரிவித்தும், ஆளுங்கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க மேலிடம் அனுமதிக்காததால், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் செயற்கை வெள்ளம் உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயற்கை சீற்றமான கஜா புயல் தாக்கிய பிறகு காட்டப்படும் அலட்சியத்தால் செயற்கை சீரழிவுகள் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    உயிரிழப்பு, உடைமை இழப்பு, பயிர் இழப்பு எனப் பல வகை இழப்புகளை சந்தித்துள்ள புயல் பாதித்த பகுதிகளில் முறையான நிவாரணப் பணிகள் இல்லாத காரணத்தால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயமும் உண்டு என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏற்கனவே டெங்கு – பன்றிக்காய்ச்சல் போன்ற கொடூர நோய்களுக்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், மர்மக் காய்ச்சல் என மறைத்த காரணத்தால் தமிழ்நாட்டில் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக புயல் பாதித்த பகுதிகளிலும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ள நிலையில், மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்.

    மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை நேரில் காண்கிறேன். .குவிந்த கைகளும் கோரிக்கை மனுக்களுமாக கண்ணீர் வழியக் கதறுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆறுதல் கூறுகிறேன். அவர்களின் கோரிக்கைகளை ஆளுங்கட்சியிடம் எடுத்துரைக்கும் கடமையையும் உணர்கிறேன். பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்றத்தனமாக செயல்படும் நிலையில், களத்தில் இறங்கி செய்ய வேண்டிய நிவாரணப் பணிகளைக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பணிகள் மேலும் விரிவடைய வேண்டும். நம்மால் ஆனவற்றைச் செய்வோம். ஆணவத்துடன் செயல்படும் ஆட்சியாளர்கள் அதிலிருந்து பாடம் கற்கட்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்ட மக்கள் தக்க பாடம் கற்றுத் தருவார்கள்.

    அன்புடன், மு.க.ஸ்டாலின்.
    திருவள்ளுவர் ஆண்டு 2049, கார்த்திகை 02. 18-11-2018.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,631FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...