ஆக்கிரமிப்புக்கு கருணாநிதியே காரணம் : சைதை துரைசாமி

 
சென்னையில் ஏற்ப்பட்ட வெள்ள பாதிப்பு தி.மு.க., தான் காரணம் என மேயர் சைதை துரைசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் .
மேயர் சைதை துரைசாமி தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம்நேற்று நடந்தது. கூட்டத்தில், மழை வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட காரணம் குறித்தும், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து ஏற்பட்ட சர்ச்சைக்கும் விளக்கம் அளித்தபோது மேயர் கூறியதாவது :-
வடகிழக்கு பருவமழை, கடந்த அக்., 28ம் தேதி துவங்கியது. கடந்த, 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மழை கொட்டி தீர்த்தது. தாம்பரம் கடல் மட்டத்தில் இருந்து, 32 மீ., உயரம். குரோம்பேட்டை, 30 மீ., பல்லாவரம் 24 மீ., மீனம்பாக்கம் 18 மீ., மாம்பலம் 13 மீ., கிண்டி, பழவந்தாங்கல் இரண்டும் 12 மீ., பரங்கிமலை 11 மீ., உயரத்தில் உள்ளன.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், நவ., 30 மற்றும் டிச., 1ம் தேதிகளில், இரவு பகலாக பெய்த கனமழையால், மூன்று மாவட்டங்களில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பின. செம்பரம்பாக்கம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியதும், திறந்துவிடப்பட்டது.
இப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீரால் மட்டுமல்ல, அதன் சுற்றுப் பகுதியில் பெய்த, 100 ஆண்டுகள் வரலாறு காணாத பேய்மழையாலும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சார்ந்த பல ஏரிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்ட, அதிக அளவிலான உபரி நீராலும் அடையாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.திரு.வி.க., மேம்பாலம் அருகே, 485 மீ., ஆகவும், மீனம்பாக்கம் விமான நிலையம் பின்புறம் 222 மீ., ஆகவும் அகலம் கொண்ட அடையாறு, நந்தம்பாக்கத்தில் 59 மீ., சைதாப்பேட்டை மேம்பாலம் அருகே 83.3மீ., கோட்டூர்புரத்தில் 125 மீ., என, சுருங்கியதற்கு காரணமே கருணாநிதி தான். கடந்த, 1967ம் ஆண்டு கருணாநிதி, பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த போது, ‘கூவத்தில் படகு விடுகிறோம்’ என்று சொல்லி, அவர் அறிவித்த கூவம் சீரமைப்புத் திட்டத்திற்காக திருவாரூரில் இருந்து நுாற்றுக்கணக்கான கூலி தொழிலாளர்களை அழைத்து வந்தார். அவர்களை முதன் முதலாக கூவம் ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமித்து, குடிசை போட்டு தங்க வைத்தார்.
கடந்த, 1971ம் ஆண்டு தேர்தலில், கருணாநிதியை எதிர்த்து நின்று, 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற, காங்கிரஸ் வேட்பாளர் குடந்தை ராமலிங்கம் சொன்ன குற்றச்சாட்டே, ‘கூவத்திற்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களை கள்ள ஓட்டுப் போட வைத்து, வெற்றி பெற்று விட்டார் கருணாநிதி’ என்பது தான்.அதன்பின், அவர் தான், ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்து, அரசே கட்டடங்கள் கட்டுவதற்கு அடிகோலினார். இதற்கு அவர் உருவாக்கிய வள்ளுவர் கோட்டமும், மத்திய அரசு நிறுவனத்திற்காக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு கட்டிய கட்டடமும், இன்னும் பிற கட்டடங்களும் சாட்சிகளாக உள்ளன.கடந்த, 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நீர்வழிப் பாதைகள் துவங்கி, மயானம், மந்தைவெளி, மேய்ச்சல் புறம்போக்கு என்று எல்லா பகுதிகளிலும், தன் கட்சிக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களையும், அரசுக்கு தேவைப்படாத நிலங்கள் என்று அறிவித்து, அரசாணை எண் 854 மூலம், ஆக்கிரப்புகளை வரைமுறைப்படுத்தினார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கருணாநிதி ஆட்சியில், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் வினாடிக்கு, 14,400 கன அடி, அதற்கு முன், 1976ம் ஆண்டு, வினாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், 15 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டது.
அப்போதெல்லாம் இதுபோன்ற பேரழிவு ஏற்படவில்லை. இதற்கு அப்போது இவ்வளவு அதிகமாகவும், பரவலாகவும் பெருமழை பெய்யவில்லை என்பதும், மற்ற ஏரிகளில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்படவில்லை என்பதும் தான் காரணம். குடிநீர் ஏரிகள், பாசன ஏரிகள் மழையால் நிரம்பும்போது, அதன் முழு கொள்ளளவிற்கு, 90 சதவீதம் வரும் வரை நீர் திறக்கப்படக் கூடாது என்பது பொதுப்பணி துறை விதிமுறை. அதன்படி தான் அரசு செயல்பட்டது. இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.
‘ஏரியை அழித்து, கருணாநிதி வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கினார்’ என்று மேயர் சைதை துரைசாமி பேசியதும், தி.மு.க., கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, 20 நிமிடங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்த தி.மு.க., கவுன்சிலர்களை, கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றுமாறு, மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்ட்தால் சபை காவலர்கள் மூலம், அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.