ஶ்ரீ ஸரஸவாணி கலைமகளின் திரு அவதாரம் . அவரும் ஶ்ரீசங்கரரும் வாதம் புரிந்த பொழுது , வாதத்திற்கு எல்லை இல்லையோ எனத் தோன்றியது . ஸஹோதர ஸஹோதரியராகிய ஞான ஸத்குரு ஶ்ரீபரமேஸ்வரரும் , வேதமாதா ஶ்ரீஸரஸ்வதியும் ஏற்படுத்திய ஞானப்ரவாகத்தால் அந்த ஸதஸ் ஒளி மிகுந்து திகழ்ந்தது . ஶ்ரீசங்கரரிடம் தோல்வியுற்ற தேவி பிரும்ம லோகத்திற்கு புறப்பட்டாள் .
அப்பொழுது ஶ்ரீசங்கரர் “தாங்கள்தான் அனைத்துலகிற்கும் தாயாகிய பரதேவதை . அனைத்து வாக் சக்திகளுக்கும் தலைவியாகிய கலைமகள் . அனைத்து செல்வங்களும் வாரி வழங்கிடும் ஶ்ரீமஹாலக்ஷ்மி . நான் தக்ஷிணாம்னாய பீடம் ஏற்படுத்தும் பொழுது , அதன் அதிஷ்டான தேவதையாய் எழுந்தருளி அருள்பாலிக்க வேண்டும் ” என்றார் . அதற்கு தேவியும் சம்மதித்தார் .
ஒப்பற்ற க்ஷேத்திரமாகிய ஶ்ரீஶ்ருங்கேரியை ஶ்ரீசங்கரர் அடைந்த பொழுது இதுவே ஞானபீடமாகிய ஶ்ரீசாரதா பீடத்தை நிறுவுவதற்கான ஏற்ற இடம் என்று தீர்மானித்தார் .
அவ்வாறே ஶ்ரீமடத்தை நிறுவி , ஶ்ரீசாரதா தேவியை அதன் அதிதேவதையாய் நியமித்து ஶ்ரீ சுரேஸ்வராச்சார்யரை முதல் பீடாதிபதியாய் அமர்த்தினார் அன்று முதல் பல ஞான தவச் செல்வர்களால் அலங்கரிக்கப்பட்டு ஶ்ரீபீடம் ஆராதிக்கப்படும் ஶ்ரீசாரதாதேவியின் அருளாட்சியால் ஒப்பற்ற திருத்தலமாய் விளங்கி வருகிறது .



