தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா? மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா? மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
தமிழகத்தில் அரசு நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் சமீபகாலமாக எழுந்து வருகின்றன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வருவதால் சாதாரண ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 1128 மருத்துவர் பணியிடங்களில் 301 பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 64 பணியிடங்கள், திண்டுக்கல் 51, திருநெல்வேலி 45, விருதுநகர் 45, சிவகங்கை 40 என காலியாக இருக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 160 மருத்துவர் பணியிடங்களில் 94 பேர் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இங்கு 982 படுக்கை வசதிகள் உள்ள மருத்துவமனையில் 21 லட்சம் புறநோயாளிகளுக்கும், 6,500 பிரசவங்களுக்கும் ஆண்டுதோறும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கணக்கற்ற மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாகஇருக்கிற காரணத்தால் மக்கள் அனுபவிக்கிற தொல்லைகளுக்கு அளவே இல்லாத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நெடுஞ்சாலைகளில் ஏற்படுகிற விபத்துகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற முடியாமல் பலர் இறக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழ்கிற மக்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வசதி குறைவு காரணமாக குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் தருமபுரியில் ஒரே நேரத்தில் 11 குழந்தைகள் இறக்க வேண்டிய சோக நிகழ்வு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து விழுப்புரத்திலும் இத்தகைய குழந்தை இறப்புகள் ஏற்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது. இதற்கு அடிப்படை காரணம் போதிய செவிலியர்கள் இல்லாதது, பிராணவாயு தட்டுப்பாடு, நவீன உபகரணங்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இல்லாததுதான். ஒரு அரசு மருத்துவமனையில் 8 மணி நேர பணிக்கு 26 செவிலியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தருமபுரியில் குழந்தைகள் இறக்கும் போது 4 செவிலியர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்து தமிழக அரசு பாடம் பெற்றதாக தெரியவில்லை.
தொடர்ந்து அதே அவலநிலை நீடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளின் அவலநிலையை பார்க்கிற போது இங்கே ஒரு ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியைத் தான் கேட்கத் தோன்றுகிறது என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்