20 தமிழர்கள் படுகொலை; பிரதமர் மௌனம் கடைபிடிப்பது ஏன்?: ராமதாஸ்

20 அப்பாவித் தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் பிரதமர் மவுனம் கடைபிடிப்பது ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்திருக்கின்றனர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் கூறிய காரணங்கள் அனைத்தும் பொய் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலையிலிருந்து சித்தூருக்கு கட்டிட பணிக்காக பேரூந்தில் சென்ற தொழிலாளர்களை கடத்திச் சென்று ஆந்திரக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். காவல்துறையிடமிருந்து தப்பி வந்த சேகர் என்பவர் இதை உறுதி செய்திருக்கிறார். எந்தவித கோபமூட்டலும் இல்லாத நிலையில்,  இக்கொடிய செயலை ஆந்திரக் காவல்துறை அரங்கேற்றியிருப்பதன் பின்னணியில் பெரிய சதி இருப்பதாகவே தோன்றுகிறது. ஆந்திரத்திலுள்ள செல்வாக்கு படைத்தவர்களில் எவருடைய ஆசையையாவது நிறைவேற்றுவதற்காக அப்பாவி தமிழர்களை அம்மாநிலக் காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
இது உண்மையாக இருந்தால் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நீர்த்துப் போகச் செய்து, உண்மையை மூடி மறைக்கவே ஆந்திர அரசு முயற்சி செய்யும். இரக்கமின்றி 20 பேர் கொல்லப்பட்டதற்காக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  இதுவரை வருத்தம் கூட தெரிவிக்காதது இதை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி, ஆந்திர முதல்வர் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து விளக்கமளித்திருப்பது தமது அரசின் செயல்களை நியாயப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், நியாயமான விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதை உறுதிசெய்யும் கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் தான் உள்ளது. ஆனால், இந்த கொலைகள் குறித்து நம்பத்தகுந்த விசாரணை நடத்தும்படி ஆந்திர முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதுடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்கிக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியோ இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.
ஆந்திரக் காவல்துறை நடத்திய கொடூரக் கொலைகளுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பிரதமர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதுபோன்ற சூழலில் இரு மாநில முதலமைச்சர்களையும் பிரதமர் தொடர்பு கொண்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதும், இரு மாநிலங்கள் தொடர்பான பிரச்சினை என்பதால் மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும்படி ஆலோசனை வழங்குவதும் தான் வழக்கம். ஆனால், ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஜப்பானியர்களும், ஆங்கிலேயர்களும் படுகொலை செய்யப்பட்டதற்கெல்லாம் கண்டனம் தெரிவித்த நரேந்திர மோடிக்கு ஆந்திர அரச பயங்கரவாதத்தால் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கவோ அல்லது அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவோ முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
வட இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்தை சேர்ந்த 20 பேர் வேறு மாநிலத்தில் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் பெரும் பிரளயமே வெடித்திருக்கும். ஆனால், கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால் இதை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் தான் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2008 ஆம் ஆண்டில் மராட்டிய மாநிலத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அதற்கு எதிராக ஒட்டுமொத்த வட இந்தியத் தலைவர்களும் போர்க்கொடி உயர்த்தினார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா இதற்காக மராட்டிய மாநில அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
அக்கட்சியின் பூர்வாஞ்சல் பிரிவு இக்கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் தில்லியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்தார். வெளிமாநிலத்தவர் மீதான தாக்குதலை பெரும் பிரச்சினையாக பார்த்த மத்திய அரசும், தேசியக் கட்சிகளின் தலைமைகளும் 20 தமிழர்கள் வெளிமாநிலத்தில் கொல்லப்பட்டதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு,  இறந்தவர்கள் தமிழர்கள் தானே என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
சென்னை முகலிவாக்கத்தில் மனிதர்களின் விதிமீறலால்  கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திலேயே ஆந்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகள் இணைந்து ரூ.20 லட்சம் இழப்பீடு அளித்தன. ஆனால், கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு வெறும் ரூ.3 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயமாகும்.
இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தான் நீதி வழங்க முடியும். எனவே, 20 பேர் படுகொலையை கடுமையாக கண்டிப்பதுடன், இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு  தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஆந்திர சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 3000 தமிழர்களை விடுதலை செய்யும்படியும் ஆந்திர முதலமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட வேண்டும்.
Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.