நாய் எப்படி ஆடானது? எந்த விதியின் கீழ் இறைச்சி அழிக்கப்பட்டது?: நீதிமன்றம் கேள்வி

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

29 July19 Chenni highcourt - 2026

சென்னை: நாய் எப்படி ஆடு ஆனது? பொதுமக்களுக்கு இருக்கும் பெரிய கேள்வி இதுதான். கடந்த 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் 2,100 கிலோ துர்நாற்றம் எடுத்த இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவை பார்ப்பதற்கு நாய்க்கறி போல் இருந்ததால், உடனே அதிகாரிகள் இவை நாய்க்கறிதான் என்று கூறினர். அவ்வாறே செய்திகளும் வெளியாயின. இதை அடுத்து, இது குறித்து ஆய்வுச் சாலையில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில், இது கெட்டுப் போன ஆட்டிறைச்சி என்று கூறப் பட்டது. இதை அடுத்து பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இந்த இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், இறைச்சி குறித்த ஆய்வு அறிக்கையை உணவுத் துறை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே காவல்துறை பதிவு செய்த வழக்கில் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுசெய்ய சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்; வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சியைக் கொண்டு வருவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதை அடுத்து, இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர் இது குறித்து தெரிவித்த போது, பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அது ஆட்டு இறைச்சிதான் என்று தெரியவந்தது. இருந்தபோதிலும் அது சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அதை மாநகராட்சி அழித்துவிட்டது என்று கூறினார்.

இதை அடுத்து பதில் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்த விதியின் கீழ் அந்த இறைச்சி அழிக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியையும் பிரதிவாதியாக சேர்த்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.