செயலிழந்த தமிழக காவல் துறை : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

 
தமிழக காவல் துறை செயலிழந்து விட்டதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார் .
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாஜ பிரமுகர் சிவப்பிரகாசம் நேற்று மர்ம கும்பலால் தாக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வாணியம்பாடிக்கு விரைந்து வந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவப்பிரகாசத்தை பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:
ஆண்டின் முதல் தேதியான இன்றே(நேற்று) தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சவால்விடும் வகையில் இந்த சம்பவத்தை நடத்தியுள்ளனர். சிவப்பிரகாசத்தை வழிமறித்து இந்த கொடூர சம்பவத்தில் மர்மகும்பல் ஈடுபட்டது அதிர்ச்சியூட்டுகிறது. ஏற்கனவே பாஜகவில் இதுவரை 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது சிவபிரகாசத்தையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.தமிழக அரசின் காவல்துறை செயலிழந்து விட்டது. இதில் மிக வெட்கக்கேடானது தமிழகத்திலேயே, வேலூர் மாவட்ட காவல்துறை செயலிழந்தது தான். இந்த சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்னரே சிவப்பிரகாசம் தனக்கு அச்சுறுத்தால் இருப்பதாக வாணியம்பாடி காவல் நிலையத்திலும் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவிலும் புகார் செய்தார். ஆனாலும், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.