கோழிக்கோடில் முத்தப் போராட்டம்: கல்வீச்சு, தடியடி; 32 பேர் கைது

திருவனந்தபுரம்:

கோழிக்கோடில் முத்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் பெரும் ரணகளமானது. இதில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் பொது இடத்தில் முத்தமிட்டு போராட்டம் நடத்த ‘கிஸ் ஆப் லவ்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. மதவாதம் மற்றும் சகிப்பின்மைக்கு எதிராக கோழிக்கோட்டில் புத்தாண்டு தினமான நேற்று (1–ந்தேதி) பொது இடத்தில் முத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு ‘கிஸ் ஆப் ஸ்டிரீட்’ என்றும் பெயரிடப்பட்டது. இந்த போராட்டத்தை அறிவித்த அமைப்பினர் சமூக வலை தளங்கள் மூலம் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்கள். அதேசமயம் அனுமன் சேனை அமைப்பு உள்பட சில அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பொது இடத்தில் முத்தப் போராட்டம் நடத்த விடமாட்டோம் என்று அவர்கள் எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில் முத்தப் போராட்டக்காரர்கள் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மைதானத்தில் திரண்டனர். ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் முத்தப்போராட்டத்திற்கு தயாரானார்கள்.

அவர்களை தடுத்து நிறுத்த அனுமன் சேனா உள்பட சில அமைப்பினரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. திடீரென்று இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. முத்தப் போராட்டத்திற்காக திரண்டு நின்றவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் கற்களை வீசினார்கள். அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டது. தங்கள் கைகளில் இருந்த கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது.

kiss of love hidden muslim agenda

இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து வன்முறை நடந்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதன்பிறகே போராட்டக்காரர்கள் கலைந்து ஓடினார்கள். இந்த வன்முறை தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த முத்தப்போராட்டத்தை முதன் முதலில் தொடங்கிய ராகுல் பசுபாலன் மற்றும் அவரது மனைவி உள்பட சிலர் சமீபத்தில் ஆன்லைன் மூலம் விபசாரம் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.