தில்லியில் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி எனத் தெரிந்ததால் ரயில்கள் இயக்கம்

புது தில்லி:

தில்லி ரயில் நிலையத்துக்கு இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தில்லி-கான்பூர் ரயிலை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மும்பை பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, லக்னோ சதாப்தி ரயில் காஜியாபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டு, முழுதும் சோதிக்கப்பட்டது. அதில் அச்சப்படும் படியான எந்தப் பொருளும் இல்லை என வடக்கு ரயில்வே சிஇஓ நீரஜ் சர்மா தெரிவித்தார்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தில்லியில் பல ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இந்நிலையில், இது புரளி எனத் தெரியவந்தது. இதை அடுத்து, ரயில்கள் வழக்கம்போல் குறித்த நேரத்தில் சென்றடைய ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்தது.

பதான்கோட் தாக்குதலை அடுத்து, இந்த மிரட்டல் வந்ததால், ரயில்வே துறை மிக கவனமாக இந்த மெயிலை அணுகி, சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.