திருவண்ணாமலையை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்த லண்டன் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை

 
திருவண்ணாமலை மாவட்ட நகரில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்த லண்டனை சேர்ந்த வெளிநாட்டு வாலிபர் சிக்கினார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்திற்கு நேற்று மாலை வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்து நிர்வாகத்தினரிடம், தான் ரமணாஸ்ரமத்தையும்,கோயில் மலையையும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுத்து சேமித்து வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும் என கேட்டுள்ளார்.
அதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர் படம் எடுக்க அனுமதி கிடையாது என கூறி அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் ரமணாஸ்ரமத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வெளிநாட்டு வாலிபரை தனி அறைக்கு அழைத்து சென்று சுமார் 1 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில்அந்த வாலிபர் லண்டனை சேர்ந்த ஜோசப்(27) என்பதும், இவர் கடந்த மாதம் 14ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து, மணக்குளவிநாயகர் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி திருவண்ணாமலையை சுற்றி பார்த்த போது ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விமானத்தை பயன்படுத்துவதற்கு லண்டனில் அனுமதி பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையை தொடர்ந்து அவரிடம் இருந்த ஆளில்லா குட்டி விமானத்தை பறிமுதல் செய்து, ஆசிரமத்தில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.
வெளிநாட்டு வாலிபர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுக்க காரணம் என்ன? இங்கிருந்து படத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் தீட்டியுள்ளாரா? என காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.