நெல் ஜெயராமன் உடலுக்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி!

சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். நெல் ஜெயராமன் உடலுக்கு ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

நெல் ஜெயராமன் சொந்த ஊரான கட்டிமேடு கிராமத்தில் நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது. நாளை நண்பகல் 12 மணிக்கு இறுதிச்சடங்கு முடிந்து நெல் ஜெயராமன் உடல் அடக்கம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

நெல் ஜெயராமன் உடலுக்கு காலை 8 முதல் 11 மணி வரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப் பட்டது. தேனாம்பேட்டை ரத்னா நகர் 2வது தெருவில் நெல் ஜெயராமன் உடல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் வேன் முதல் நெல் ஜெயராமன் உடல் சொந்த ஊர் செல்கிறது.

விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவலனை இழந்து விட்டார்கள் என்றும், பாரம்பரிய நெல்வகைகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன் என்றும்  மதிமுக., பொதுச் செயலர் வைகோ இரங்கல் வெளியிட்டார்.

மறைந்த நெல்ஜெயராமன் விவசாயத்தின் மீது கொண்ட பற்றால் நெல்திருவிழா நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

நம்மாழ்வாரின் மாணவரான நெல் ஜெயராமன் மிகச்சிறந்த போராளி என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

மறைந்த நெல்ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துசெல்லும் செலவை ஏற்றார்  நடிகர் சிவகார்த்திகேயன். மருத்துவமனையில் ஜெயராமன் சிகிச்சை பெற்றதற்கான செலவுகளையும் ஏற்றிருந்தார் சிவகார்த்திகேயன்.