நெல்லையில் தனியார் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

நெல்லை :

நெல்லை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பஸ் டிரைவர் துாங்கியதே விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற அந்த தனியார் பஸ், திருநெல்வேலி அருகே பணகுடியை அடுத்த பிளாக்கோட்டை பாறையில் சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட10 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அவர்கள் அனைவரும் நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்து, மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பஸ் டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் நெல்லை-நாகர்கோயில் செல்லும் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.